குவாந்தான், ஏப். 15- ஒரு கோடி வெள்ளி ஊழல் தொடர்பான
விசாரணையின் ஒரு பகுதியாக மூன்று குடிநுழைவுத் துறை
அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) நேற்று
கைது செய்தது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் ஒன்றாவது
(கே.எல்.ஐ.ஏ.1) மற்றும் இரண்டாவது முனையங்களில் (கே.எல்.ஐ.ஏ.2)
முறையான குடிநுழைவுத் துறை சோதனையின்றி அந்நியப் பிரஜைகளை
நாட்டிற்குள் கடத்தி வரும் கும்பலுடன் அம்மூவருக்கும் தொடர்பு
உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் உள்பட அந்த மூவரும்
கடந்த 2021 மற்றும் 2024ஆம் ஆண்டுக்கு இடையே நாட்டின்
நுழைவாயில்களில் முறையான சோதனையின்றி அந்நியப் பிரஜைகளை
நாட்டிற்குள் கடத்தி வருவதற்கு உடந்தையாக இருந்ததாகக்
கருதப்படுகிறது.
இந்த மோசடிக் கும்பல் லஞ்சமாக பல லட்சம் வெள்ளியைப்
பெற்றுள்ளதோடு அவற்றை குடிநுழைவுத் துறை அதிகாரிகளுடன்
பகிர்ந்தும் கொண்டுள்ளது. விமான நிலைய முனையங்களில் கவுண்டர்
செட்டிங் எனப்படும் முறையின் கீழ் அந்நிய பிரஜைகளை நாட்டிற்குள்
கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதில் இக்கும்பல்
இடைத் தரகர்களாக செயல்பட்டு வந்துள்ளதாக அறியப்படுகிறது.
இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து
நகைகள், ரொக்கம் ஆகியவற்றை எம்.ஏ.சி.சி. கைப்பற்றியுள்ளதோடு
வங்கிக் கணக்குகளையும் தற்போது ஆய்வு செய்து வருகிறது.
அவர்கள் அனைவரும் 2009ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய
தடுப்புச் சட்டத்தின் 17(ஏ) பிரிவின் கீழ் இன்று தொடங்கி எதிர்வரும் ஏப்ரல்
21ஆம் தேதி வரை விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


