கோலாலம்பூர், ஏப் 15 - நேற்று மறைந்த நாட்டின் ஐந்தாவது பிரதமர் துன்
அப்துல்லா அகமது படாவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு நீதிமன்றம் அனுமதி
வழங்கியது.
இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு அனுமதி கோரி நஜிப்
சிறைத்துறையிடம் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை சமர்ப்பித்ததாக
அவரின் முதன்மை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமது ஷாபி அப்துல்லா
கூறினார்.
நஜிப்புக்கு எதிராக இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது
இந்த விண்ணப்பம் தொடர்பான தகவலை தாம் நீதிபதி டத்தோ கோலின்
லோரன்ஸ செகுராவிடம் முன்வைத்ததாக அவர் தெரிவித்தார்.
கனம் நீதிபதி அவர்களே, மறைந்த துன் அப்துல்லாவின் இறுதிச் சடங்கில்
கலந்து கொள்வதற்கு எனது கட்சிக்காரர் சிறைச்சாலைத் துறையிடம்
அனுமதி கோரியுள்ளார். இந்த இறுதிச் சடங்கு தேசியப் பள்ளிவாசலில்
நடைபெறுகிறது என்று ஷாபி நீதிபதியிடம் கூறினார்.
எதிர்த்தரப்பு வழக்கறிஞரின் இந்த விண்ணப்பத்திற்கு அரசுத் தரப்பு
ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள
நஜிப்புக்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம் வழக்கு விசாரணையை
நாளைக்கு ஒத்தி வைத்தது.
தனது பதவியைப் பயன்படுத்தி 230 கோடி வெள்ளி 1எம்.டி.பி. நிதியை
கையூட்டாகப் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டையும் அதே தொகை
தொடர்பான மேலும் 21 சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்குகளையும் 71
வயதான நஜிப் எதிர்நோக்கியுள்ளார்.


