ஷா ஆலம், ஏப். 15 - அண்மையில் புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு
குழாய் வெடிப்பு மற்றும் தீ விபத்துச் சம்பவம் விரைவில்
நடைபெறவிருக்கும் சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத்தில் எழுப்பப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விவகாரம் தொடர்பில் புதிய கொள்கைகளை அமல்படுத்துவதற்கு
இந்த விவாதம் வழி வகுக்கக் கூடும் என்று மாநில சட்டமன்ற சபாநாயகர்
லாவ் வேங் சான் கூறினார்.
இந்த விவகாரம் மாநில சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டு
விவாதிக்கப்படுவது அவசியம் என வலியுறுத்திய அவர், அதிக ஆபத்து
நிறைந்த பகுதிகளில் உள்கட்டமைப்புகளுக்கும் வர்த்தக வளாகங்களுக்கு
இடையே இடை மண்டலப்பகுதி பகுதி உருவாக்கப்படுவது அவசியம் என
அவர் சொன்னார்.
இந்த விபத்து தொடர்பில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதிகாரிகள் தங்கள் பணியை முறையாக மேற்கொண்டு பிரச்சனைக்குத்
தீர்வு காண்பார்கள் என எதிர்பார்க்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
மாநில சட்டமன்றம் நிச்சயமாக இவ்விவகாரம் குறித்து விவாதம் நடத்தும்.
குறிப்பாக பாதுகாப்புத் தடம் மற்றும் இடைமண்டலப் பகுதியின்
உருவாக்கம் குறித்து ஆக்ககரமான விவாதங்கள் இடம் பெறும் என
எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.
மாநில அரசு செயலகத்தில் இன்று நடைபெற்ற முதலீடுகள் தொடர்பான
உள்கட்டமைப்புகள் ஆய்வுகள் தொடர்பான செய்தியாளர் கூட்டத்தில் அவர்
இவ்வாறு தெரிவித்தார்.
சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி பெட்ரோனாஸ்
கேஸ் பெர்ஹாட் எரிவாயு குழாயில் திடீர் வெடிப்பு உண்டாகி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
காலை 8.10 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 81
வீடுகள் முற்றாக அழிந்தன. மேலும் 81 வீடுகளில் ஒரு பகுதி சேதம் ஏற்பட்ட வேளையில் 57 வீடுகள் பாதிக்கப்பட்டன. எனினும், அவற்றில் தீ பிடிக்கவில்லை.


