ஷா ஆலம், ஏப்ரல் 15 - இங்குள்ள கம்போங் பாடாங் ஜாவாவில் வெள்ளத்திற்குப் பிந்தைய துப்புரவுப் பணிகள் சனிக்கிழமை முதல் தொடங்கி பாதிக்கப்பட்ட குடியிருப்பிருப்புகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த துப்புரவு பணியில் மூத்த குடிமக்கள் அல்லது தங்கள் வீடுகளைத் துப்புரவு செய்து கொள்ள முடியாத அளவுக்கு உடல் குறைபாடுகள் உள்ளவர்கள் வசிக்கும் பகுதிகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை முதல் வெள்ளம் வடியத் தொடங்கியதிலிருந்து சுத்தம் செய்யும் பணி படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல்-ரஷீட் ஹரோன் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் தற்காலிக நிவாரண மையம் மூடப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடு திரும்பத் தொடங்கியுள்ள நிலையில் துப்புரவுப் பணியில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது.
வெள்ளத்திற்குப் பிந்தைய சுத்தம் செய்யும் பணியில் 30 தன்னார்வலர்கள் மற்றும் சிலாங்கூர் பல்கலைக்கழகத்தின் (யுனிசெல்) மாணவர்கள் அதிகாரிகள் ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர் என அவர் சொன்னார்.
குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்ய உதவும் வகையில் காலை உணவு முதல் இரவு உணவு வரை சுமார் 350 உணவுப் பொட்டலங்களையும் நாங்கள் தயாரித்துள்ளோம் என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதற்காக இதுவரை 15,000 வெள்ளியை தொகுதி ஒதுக்கியுள்ளது என்று டேனியல் மேலும் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருந்த பாடாங் ஜாவா தேசியப் பள்ளி மற்றும் பாடாங் ஜாவா தொடக்க சமயப் பள்ளி ஆகியவை தற்காலிக நிவாரண மையங்களாக முன்பு பயன்படுத்தப்பட்டன. மீண்டும் மீண்டும் இடமாற்றம் செய்வதைத் தவிர்க்க வெள்ளத்தால் பாதிக்கப்படாத செக்சன் 16 தேசியப் பள்ளியை தற்போது பயன்படுத்துகிறோம் என்றார் அவர்.
இந்த முறை பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றும் பணி மிகவும் சுமூகமாக நடந்ததாக நான் நினைக்கிறேன். மேலும் பாடாங் ஜாவா தாழ்வான பகுதிகளில் ஒன்றாகும். இது பெரும்பாலும் வெள்ள அபாயத்தில் உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு நிகழ்வையும் எதிர்கொள்ள நாங்கள் முன்கூட்டியே தயாராக உள்ளோம் என அவர் சொன்னார்.


