ஷா ஆலம், ஏப். 15 - பூச்சோங் கம்போங் கோல சுங்கை பாரு பகுதியில் 1
கோடியே 50 லட்சம் வெள்ளி செலவில் மேற்கொள்ளப்படும் கால்வாய்
விரிவாக்கப்பணிகள் அப்பகுதியில் நிலவி வரும் வெள்ளப் பிரச்சனைக்குத்
தீர்வு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடிகால் மற்றும் நீர்பாசனத் துறையினால் (ஜே.பி.எஸ்.)
மேற்கொள்ளப்படும் இந்த வடிகால் விரிவாக்கத் திட்டத்தின் மூலம்
கால்வாய்களில் நீர் கொள்ளளவு ஆற்றலை அதிகரித்து இங்கு அடிக்கடி
ஏற்பட்டு வரும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண இயலும் என்று ஸ்ரீ
செர்டாங் சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ் அஸ்மி கூறினார்.
கம்போங் கோல சுங்கை பாருவில் 1.5 கோடி வெள்ளி செலவில் வடிகால்
விரிவாக்கத் திட்டம் இவ்வாண்டு தொடங்கப்படும் என்றத் தகவலை
வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை என்னிடம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்திற்கு வடிகால் முறை மட்டும் காரணமல்ல, அதையும் தாண்டி
பருவநிலை மாற்றம், கடல் பெருக்கு உள்ளிட்ட அம்சங்களும் காரணமாக
உள்ளன என்று அவர் சொன்னார்.
நாமும் நமது பங்காக சுற்றுச் சூழல்லை பாதுகாப்பது உள்ளிட்ட
நடவடிக்கைகள் மூலம் வெள்ள அபாயத்தை தணிக்க இயலும்.
கால்வாய்களின் அடைப்பு ஏற்பட்டு வெள்ளம் ஏற்படுவதற்கு குப்பைகளும்
காரணமாக உள்ளதால் நீரோட்டங்களில் குப்பைகளை வீசுவதை தாம்
தவிர்க்க வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை தொடங்கி பல மணி நேரம் நீடித்த
வெள்ளம் காரணமாக பூச்சோங், ஷா ஆலம், கிள்ளான் உலு லங்காட்
உள்ளிட்ட பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
இந்த திடீர் வெள்ளத்திற்கு அதிகப்படியான மழையும் கடல் பெருக்கும்
கரணமாக அமைந்ததாகப் பேரிடர் மேலாண்மைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறியிருந்தார்.


