வாஷிங்டன், 14 ஏப்ரல் - அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு சீனா 125 விழுக்காடு வரையில் வரிகளை உயர்த்திய போதிலும், தமது வரிவிதிப்புக் கொள்கை சிறப்பாகவே செயல்படுவதாக அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
வர்த்தக வரிகளை அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்திருந்தாலும், அமெரிக்க டாலர் எப்போதுமே விருப்பத் தேர்வான நாணயமாக இருக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில், உலகின் முக்கியமான நாடுகளுக்கு டோனல்ட் டிரம்ப் விதித்திருக்கும் வரி விதிப்பு, உலக பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆயினும், 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரி அமலாக்கத்தை அவர் திடீரென 90 நாள்களுக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில், சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்திருக்கும் நிலையில், இப்போது ஏற்பட்டுள்ள குழப்பம் தற்காலிகமானது எனவும் அது கூறியது.
அதேவேளையில், அமெரிக்காவுக்கு எதிராக சீனா செயலபடும்போது, தக்க பதிலடி கொடுக்கப்படும் என்பதையும் டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.
உலகின் இரு பெரிய பொருளாதார சக்திகளான அமெரிக்காவும் சீனாவும் வரிகளை விதித்து பதிலடி கொடுத்துள்ளதை அடுத்து, உலக அளவில் இது பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
-- பெர்னாமா


