கோலாலம்பூர், ஏப்ரல் 14 - சீன அதிபர் ஜி ஜின் பிங் நாளை தொடங்கி மூன்று நாட்கள் மலேசியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள விருக்கிறார்.
மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் இப்பயணத்தை மேற்கொள்ளும் அதிபர் ஜி, ஏப்ரல் 15 முதல் 17 வரை நாட்டில் தங்கியிருப்பார் என வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இந்த வருகையின் போது ஜி ஜின் பிங் கிங்கிற்கு அரசாங்க வரவேற்பு விழா நல்கப்படும். அதனைத் தொடர்ந்து இஸ்தானா நெகாராவில் சுல்தான் இப்ராஹிமுடன் அதிபர் சந்திப்பு நடத்துவார்.
அதிபர் ஜி மற்றும் அவரது பேராளர் குழுவை கெளரவிக்கும் வகையில் சுல்தான் இப்ராஹிம் அரசு விருந்தையும் வழங்குவார்.
அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுடன் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கவும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை அதிபர் ஜி சந்திக்க உள்ளார்.
இரு தலைவர்களும் பின்னர் மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் குறிப்புகளைப் பரிமாறிக் கொள்வார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜின் பிங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் புத்ராஜெயாவில் உள்ள ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் அன்வார் அதிகாரப்பூர்வ இரவு விருந்து அளிக்கவுள்ளார்.
2025ஆம் ஆண்டிற்கான முதலாவது வெளிநாட்டுப் பயணத்தின் ஒரு பகுதியாக அவர் வியட்நாம் மற்றும் கம்போடியாவுக்கும் செல்லவிருக்கிறார்.
ஆகக் கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு அதிபர் ஜி ஜின்பிங் மலேசியாவுக்கு வருகை புரிந்தார்.
அப்போது இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை விரிவான விவேக பக்காளித்துவ நிலைக்கு உயர்த்தின.
மலேசியாவும் சீனாவும் மே 31, 1974 அன்று அரசதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன. கடந்த ஆண்டு அரச தந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இரு நாடுகளும் வலுவான இருதரப்பு உறவுகளை பேணிக்காத்து வருகின்றன.
கடந்த 2009 முதல் 16 ஆண்டுகளாக சீனா மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்து வருகிறது.
2024 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் 48, 412 கோடி வெள்ளியாக இருந்தது. இது மலேசியாவின் உலகளாவிய மொத்த வர்த்தகத்தகமான 2.879 டிரில்லியன் வெள்ளியில் 16.8 விழுக்காட்டைக் குறிக்கிறது.


