கோலாலம்பூர், ஏப். 14- கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் நேற்று காலை சௌகிட் சந்தையில் நடத்திய சோதனை நடவடிக்கையில் 103 வெளிநாட்டினர் நகைது செய்யப்பட்டனர்.
காலை 10.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த 'ஒப் குத்தேப்' நடவடிக்கையில் 80 இந்தோனேசியர்கள், 13 வங்காளதேசிகள், ஐந்து மியான்மர் நாட்டினர் இந்தியாவைச் சேர்ந்த நால்வர் மற்றும் ஒரு ஏமன் நாட்டவர் உட்பட 136 வெளிநாட்டினர் சோதனை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குனர் வான் முகமது சௌபி வான் யூசோப் தெரிவித்தார்.
தடுத்து வைக்கப்பட்ட அனைவரும் 21 முதல் 58 வயதுக்குட்பட்ட 80 ஆண்களும் 23 பெண்களும் ஆவர். அவர்கள் ஆவணப்படுத்தல் செயல்முறைக்காக ஜாலான் டூத்தாவிலுள்ள கோலாலம்பூர் குடிநுழைவுத் துறைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என்று அவர் சோதனை நடவடிக்கைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு அப்பால் நாட்டில் தங்கியிருந்தது மற்றும் செல்லுபடியாகும் குடிநுழைவு அனுமதி இல்லாமல் நாட்டிற்குள் நுழைந்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த வழக்கு 1959/63 குடிநுழைவுச் சட்டத்தின்படி 15(1)(சி) மற்றும் 6(1)(சி) பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
குடிநுழைவு துறை அமலாக்கப் பிரிவின் மொத்தம் 52 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் இந்த சோதனை நடவடிக்கையில் பங்கு கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.


