செய்தி (ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஏப். 15- இன்று மலரும் விசுவாவசு சித்திரைப் புத்தாண்டை நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் கோலாகலமான முறையில் கொண்டாடுகின்றனர்.
சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். இந்த நாளில் தான் பிரம்ம தேவர் உலக உயிர்களை படைக்க துவங்கியதாக சொல்லப்படுகிறது.
சூரிய பகவான், மேஷம் துவங்கி மீனம் வரை 12 ராசிகளிலும் தனது பயணத்தை நிறைவு செய்வதை ஒரு ஆண்டு எனப்படுகிறது.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.
நம் நாட்டில் இந்த சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் நேற்று தொடங்கி ஏற்பாடுகளை மும்முரமாக மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர்.
இந்த விழாவின் முத்தாய்ப்பு அங்கமாக ஆலயங்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதோடு மக்கள் வீடுகளிலும் இறைவனுக்கு படையலிட்டு குடும்பத்துடன் இத்திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்கடர் ஜி. குணராஜ், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் உள்ளிட்ட தலைவர்கள் நாட்டிலுள்ள இந்துக்களுக்கு தங்களின் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.


