ஷா ஆலம், ஏப்ரல் 14 - இம்மாதம் 1 ஆம் தேதி புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை பழுதுபார்ப்பதற்கும் அவர்களுக்கு வாடகை வீடுகளை ஏற்பாடு செய்து தருவதற்கும் மாநில அரசு முன்னுரிமை அளிக்கும்.
இந்த இரு முயற்சிகளையும் தனது அலுவலகம் ஒருங்கிணைக்கும் என்று மாநில அரசு செயலாளர் டத்தோ அகமது பாட்ஸ்லி அகமது தாஜூடின் கூறினார்.
புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசல் நிவாரண மையம் மூடப்பட்டு விட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு வாடகை வீடுகள் மற்றும் பேரிடருக்குப் பிந்தைய முயற்சிகளை அரசு ஒருங்கிணைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக அவர், சிலாங்கூர் அரசு சார்பில் கிளந்தான் அரசாங்கத்திடம் இருந்து 500,000 வெள்ளி பேரிடர் நிவாரண நிதியைப் பெற்றுக் கொண்டார். கிளந்தான் மந்திரி பெசார் டத்தோ முகமட் நசுருடின் டாவூட் இந்நிதியை வழங்கினார்.
இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோருக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமியும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக இந்த பங்களிப்பு சிலாங்கூர் பிரிஹாத்தின் நிதிக்கு அனுப்பப்பட்டது என நசுருடின் கூறினார்.
கிளந்தானுக்கும் சிலாங்கூருக்கும் இடையே நீண்ட நெடிய உறவு உள்ளது. கிளந்தான் வெள்ளப் பேரிடரை எதிர்கொண்டபோது சிலாங்கூர் உதவி வழங்கியது.
இந்த (எரிவாயு குழாய் வெடிப்பில்) கிளந்தானைச் சேர்ந்த ஏழு குடும்பங்களும் பாதிக்கப்பட்டன. அவர்களில் சிலர் காயமடைந்தனர். ஆனால் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


