பாச்சோக், ஏப்ரல் 12 - நீண்ட காலமாக மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்து வரும் வெள்ளப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் கிளந்தானில் வெள்ளத் தணிப்புத் திட்டங்களை விரைவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
வெள்ளப் பிரச்சினையைச் சமாளிப்பது மட்டுமல்லாது வறட்சிக் காலங்களில் ஏற்படும் நீர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான புதிய முறைகளை ஆராய்வது இதில் அடங்கும் என அவர் சொன்னார்.
கிளந்தான் மாநிலம் பல முக்கிய திட்டங்களை அடையாளம் கண்டுள்ளது. இவ்வாண்டில் அதிக செலவுகள் இருந்தபோதிலும் படிப்படியாக வெள்ளத் தணிப்புத் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என்று நான் முடிவு செய்துள்ளேன்.
ஆண்டுதோறும் தொடர்ந்து வெள்ளம் ஏற்படுவதைக் காண நாங்கள் காண விரும்பவில்லை. மத்திய அரசு உட்பட அரசாங்கங்கள் வந்து போய்க் கொண்டிருந்தாலும் வெள்ள நிலைமையை தீர்க்க முடியாத நிலை உள்ளது.
அதனால்தான் நான் பெட்ரா, (எரிசக்தி உருமாற்றம் மற்றும் நீர் மாற்ற அமைச்சு), பொருளாதார மற்றும் நிதி அமைச்சுகளை புதிய பல அணுகுமுறைகளை ஆராய சொன்னேன்.
சில நேரங்களில் நீர் அதிகமாக நிரம்பி வழிகிறது. இதனால் வெள்ளம் ஏற்படுகிறது. பின்னர் அடுத்த மாதங்களில் அது முற்றிலும் வறண்டு தண்ணீர் முற்றிலும் இல்லாமல் போகிறது அல்லா நமக்கு வலிமை, முயற்சி மற்றும் தொழில்நுட்பத்தை அளித்துள்ளார் - வெள்ளத்தின்போது நிரம்பி வழியும் நீரை வறண்ட காலத்தின் போது நம்மால் சேமிக்க முடியாதா? நிச்சயமாக அது முடியும் சொன்னார்.
இன்று பந்தாய் இராமாவில் நடைபெற்ற கிளந்தான் மாநில அளவிலான 2025 மடாணி நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தின் போது அவர் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில் கிளந்தான் மந்திரி புசார் டத்தோ முகமது நசுருடின் டாட், தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் மற்றும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.


