தாப்பா, ஏப். 12- ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி, பெரிக்கத்தான் நேஷனல் மற்றம் மலேசிய சோசலிச கட்சி (பி.எஸ்.எம்.) இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இத்தேர்தலில் தாப்பா தொகுதி அம்னோ தலைவர் டாக்டர் முகமது யுஸ்ரி பாக்கிர் (வயது 54) களமிறங்கப்பட்டுள்ள வேளையில் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் அக்கட்சியின் தாப்பா தொகுதித் தலைவர் அப்துல் முமைமின் மாலிக் (வயது 44) மற்றும் பி.எஸ்.எம். கட்சியின் துணைத் தலைமைச் செயலாளர் பவானி கேஎஸ் (வயது 40) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இங்குள்ள டேவான் மெர்டேக்காவில் நடைபெற்ற வேட்பு மனுத்தாக்கல் இன்று காலை 10.00 மணிக்கு முடிவடைந்ததைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி ரெட்ஹானுடின் அகமது சுக்கோரி காலை 10.23 மணிக்கு வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார்.
அப்துல் முமைமின் காலை 9.01 மணிக்கும் அவரைத் தொடர்ந்து முகமது யுஸ்ரி காலை 9.06 மணிக்கும் தங்களின் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
இதனிடையே, பிறரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் பி.எஸ்.எம். வேட்பாளரான பவானி டிராக்டரில் தனது ஆதரவாளர்களுடன் வந்து வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
வேட்பு மனுத்தாக்கல் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக வேட்பு மனுத் தாக்கல் மையத்தில் அதிகாலை 6.30 மணி முதல் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவை வழங்குவதற்காக ஆதரவாளர்கள் காலை 7.00 மணி முதல் வேட்பு மனுத் தாக்கல் மையத்திற்கு வெளியே காத்திருந்தனர்.
ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஸ்ஹாம் ஷாருடின் (வயது 58) கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலுக்கான தொடக்க வாக்களிப்பு ஏப்ரல் 22ஆம் தேதியும் தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும் நடைபெற தேர்தல் ஆணையம் நாள் குறித்துள்ளது.


