சுபாங் ஜெயா, ஏப். 12- அண்மையில் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் இன்று மேற்கொள்ளப்படும் துப்புரவுப் பணிகளில் மாநில அரசு மற்றும் பல்வேறு அரசு சார்பு நிறுவனங்களைச் சேர்ந்த 4,600 தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.
புத்ரா ஹைட்ஸ் மற்றும் கம்போங் கோல சுங்கை பாருவை உள்ளடக்கிய பகுதியை இந்த மாபெரும் துப்புரவு இயக்கம் இலக்காக கொண்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அனைத்துக் குழுக்களைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமான மனித ஆற்றலின் வழி இந்த பகுதியை துப்புரவுப் படுத்தும் பணியை இன்றும் நாளையும் முழுமையாக மேற்கொண்டு முடிக்க இயலும் என தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
கடந்த ஒரு வார காலத்தில் 80 முதல் 90 விழுக்காட்டுத் துப்புரவுப் பணிகளை கும்புலான் டாருள் ஏஹ்சான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் புத்ரா ஹைட்ஸ் பகுதியில் மேற்கொண்டது என்று அவர் குறிப்பிட்டார்.
அதிக குப்பைகள் நிறைந்த மற்றும் கடினமானப் பகுதியாக விளங்கும் கம்போங் கோல சுங்கை பாருவில் தன்னார்வலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
புத்ரா ஹைட்ஸ் பகுதியில் ஏற்கனவே துப்புரவுப் பணிகள் தொடங்கி விட்டன. எனினும், கம்போங் கோல சுங்கை பாருவில் நுழைய இப்போதுதான் காவல் துறை அனுமதித் துள்ளதால் இப்பகுதி மீது தற்போது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது என்றார் அவர்.
இந்த துப்புரவு இயக்கத்தில் பங்கு கொண்டுள்ள அனைத்து தன்னார்வலர்களுக்கும் குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காலை 8.10 மணிக்கு எரிவாயு குழாயில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தின் காரணமாக தீ சுமார் 30 மீட்டர் உயரத்திற்கு கொளுந்து விட்டெரிந்தது. இப்பகுதியில் வெப்பத்தின் அளவு 1,000 டிகிரி செல்சியசை தாண்டியது.


