ஷா ஆலம், ஏப். 12- கிள்ளான், கம்போங் பாடாங் ஜாவாவில் உள்ள தனது வீட்டில் வெள்ளம் சூழ்ந்தபோது சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்த கைப்பேசியை பயன்படுத்திய ஆடவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
பொருள் விநியோகிப்பாளரான அந்த 24 வயது உள்ளூர் நபர் நேற்று மாலை 6.11 மணியளவில் லோட் குடியிருப்பில் உள்ள ஒரு தரை வீட்டில் இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக ஷா ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.
அந்த ஆடவர் வீட்டில் தலைகுப்புறக் கிடந்தது தொடர்பில் பொதுமக்கள் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். வீட்டில் வெள்ளம் புகுந்தபோதுசார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்த கைப்பேசியை பயன்படுத்தியபோது அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என தொடக்கக்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் உடலைப் பரிசோதித்ததில் போராட்டத்திற்கான அறிகுறிகள் அல்லது வெளிப்புறக் காயங்கள் எதுவும் தெரியவில்லை என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தகவல் தெரிந்த பொதுமக்கள் விசாரணைக்கு உதவ புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமட் ஃபில்ட்சா சே இப்ராஹிமை 016-9537372 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முன்னதாக, ஷா ஆலம், செக்சன் 25, தாமான் ஆலம் இண்டாவில் உள்ள ஒரு கட்டுமானப் பொருள் கிடங்கில் மின்சாரம் தாக்கி இலங்கையர் ஒருவரும் ஒரு நாயும் இறந்ததாகக் கூறப்படுகிறது .


