ஷா ஆலம், ஏப்ரல் 12- நாளை நடைபெறவிருந்த ஷா ஆலம் நாடாளுமன்றம் மற்றும் பத்து தீகா சட்டமன்றத் தொகுதிகளின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசோப் தெரிவித்தார்.
ஷா ஆலம் நாடாளுமன்றம் மற்றும் பத்து தீகா சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய சில பகுதிகளைத் தாக்கிய வெள்ளத்தைத் தொடர்ந்து கம்போங் பாடாங் ஜாவா, தாமான் ரஸ்னா, செக்சன் 23, கம்போங் கெபுன் பூங்கா மற்றும் கம்போங் குவாந்தான் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செக்சன் 16 தேசியப் பள்ளி, செக்சன்16 தேசிய இடைநிலைப்பள்ளி, மற்றும் எஸ்.ஆர்.ஏ. பாடாங் ஜாவ ஆகிய இடங்களில் மூன்று தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன என்று அவர் சொன்னார்.
அடுத்த சில நாட்களுக்கு நிலவக்கூடிய நிச்சயமற்ற வானிலையை எதிர்கொள்வதற்கான ஏற்பாடு இதுவாகும் என்று பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல் ரஷீத்துடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
விருந்துக்கான ஏற்பாடு மற்றும் செலவுகளுக்கு ஒதுக்கப்பட்டத் தொகை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் உணவு, துப்புரவு செய்வது மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு விநியோகிக்கப்படும் என்று அஸ்லி கூறினார்.
இதனால் ஏற்படும் சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் நாங்கள் கொண்டுள்ள கடப்பாட்டை இந்நடவடிக்கை பிரதிபலிக்கும் என நம்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்


