ஷா ஆலம், ஏப்ரல் 11: தற்போதைய மழை மற்றும் வெள்ள நிலைமை காரணமாக ஷா ஆலமைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) தெரிவித்துள்ளது.
உள்ளூர் நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இக்கேடா மற்றும் நிப்பான் ஸ்டீல் மின்சார துணை மின்நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெனாகா நேஷனல் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.
"பொதுமக்கள் மின்சார சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், பிரதான சுவிட்சை அணைத்து வைக்கவும் கேட்டு கொள்ளப்படுகிறது. பொதுமக்களின் பொறுமையை பெரிதும் எதிர்பார்ப்பதாக தெனாகா நேஷனல் பெர்ஹாட் முகநூலில் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் ஷா ஆலமில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில் எச்.எல் கிடங்கிற்கு முன்னால் உள்ள பிரதான சாலை, செக்ஷன் 23, ஸ்ரீ மூடா உட்பட, பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஷா ஆலம் தவிர, கிள்ளான், பூச்சோங் மற்றும் உலு லங்காட் ஆகிய பகுதிகளிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி, ஷா ஆலமில் இரண்டு தற்காலிக நிவாரண மையங்களும், கிள்ளானில் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளன.


