(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஏப். 11- கோத்தா கெமுனிங் தொகுதியில் தொடர்கதையாகி
வரும் வெள்ளப் பிரச்சனை குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்ட
அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதன்,
இவ்விவகாரத்தில் மாநில மந்திரி புசார் விரைந்து தலையிட்டு உரியத்
தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இத்தொகுதி எதிர்நோக்கும் வெள்ளப் பிரச்சனை தாமான் ஸ்ரீ மூடாவையும்
தாண்டி அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியது மிகவும்
கவலையளிப்பதாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
இன்று அதிகாலை பெய்த கன மழை காரணமாக கோத்தா கெமுனிங்
தொகுதியில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டது குறித்து நான் மிகுந்த
கவலையும் அச்சமும் அடைகிறேன்.
இந்த வெள்ளப் பேரிடரில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கக்கூடிய தாமான்
ஸ்ரீ மூடா, தாமான் டேசா கெமுனிங், கம்போங் புக்கிட் லஞ்சோங், புக்கிட்
கெமுனிங், கம்போங் லஞ்சோங் ஜெயா ஆகிய ஐந்து இடங்கள்
பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில்
கூறினார்.
கோத்தா கெமுனிங் தொகுதியில் ஏற்படும் வெள்ளம் தாமான் ஸ்ரீ மூடாவை மட்டும் பாதிக்கவில்லை. மாறாக, அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவிவிட்டது. நீர் இறைப்பு பம்ப் சாதனங்களும் வடிகால் முறையும் போதுமானதாக இல்லை அல்லது முறையாகச் செயல்படவில்லை என்பதை இது புலப்படுத்துகிறது.
நேற்றிரவு தொடங்கி கனமழை பெய்த போதிலும் நீர் இறைப்பு
இயந்திரங்கள் விடியற்காலை 3.00 மணிக்குதான் செயல்படத்
தொடங்கியதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் வெள்ளம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. தற்போதுள்ள வெள்ளத் தடுப்பு முறை போதுமானதல்ல என்பது இதன் மூலம் தெரிய
வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, இவ்விவகாரத்தில் நேரடியாக தலையிடும் படி மந்திரி புசாரை
நான் கேட்டுக் கொள்கிறேன். வெள்ளத் தணிப்புத் திட்டத்திற்காக மாநில
அரசு பெரும் தொகையைச் செலவிட்டுள்ளதை நான் அறிவேன்.
குத்தகையாளர்களின் பணிகள் முறையாகக் கண்காணிக்கப்பட வேண்டியதன்
அவசியத்தை இது உணர்த்துகிறது.
இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக வடிகால் மற்றும் நீர்பாசனத்
துறை (ஜே.பி.எஸ்.) மற்றும் ஊராட்சி மன்றம் போன்ற துறைகள் மந்திரி
புசார் அலுவலகத்தின் நேரடிப் பார்வையின் கீழ் கொண்டு வரப்பட
வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
எனது தொகுதி மக்கள் யாரையும் குறை கூற விரும்பவில்லை. அவர்கள்
தீர்வைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அரசாங்கம் பரிவுடன் செயல்பட்டு
குறைகளைச் செவிமடுத்து உறுதியான உடனடியாக எடுப்பதைக் காண
விரும்புகிறார்கள் என பிரகாஷ் கூறினார்.
எத்தனை முறைதான் கோத்தா கெமுனிங் மக்கள் இடம் பெயர்வது?
எத்தனை முறைதான் சொத்துகள் அழிவதை பார்த்துக் கொண்டிருப்பது?
இந்த பிரச்சனை புதிதல்ல. பல ஆண்டுகளாக மக்கள் குரல் எழுப்பி வரும்
பிரச்சனைதான்.
ஆகவே, மந்திர புசார் கருணை கூர்ந்து கோத்தா கெமுனிங் வெள்ளப்
பிரச்சனையில் உரிய கவனம் செலுத்த வேண்டும். எங்களுக்கு
காரணங்கள் தேவையில்லை. பலனை மட்டுமே காண விரும்புகிறோம்
என்று அவர் அந்த அறிக்கையில் கூறினார்.


