ஷா ஆலம், ஏப். 11- நேற்றிரவு தொடங்கி தொடர்ச்சியாக பெய்து வரும்
கனமழை காரணமாக ஷா ஆலமின் பல பகுதிகளில் குறிப்பாக
சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பேரிடர் காரணமாக
செக்சன் 23, தாமான் ஸ்ரீ தாமான் ஸ்ரீ மூடா செல்லும் வழியில் உள்ள
எச்.எல். பொருள் சேமிப்பு கிடங்கு அருகே வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அந்த சாலையை கனரக வாகனங்கள் மட்டுமே கடக்க முடிவதையும்
இலகு ரக வாகனங்கள் திரும்பிச் செல்வதையும் மீடியா சிலாங்கூர்
மேற்கொண்ட ஆய்வில் கண்டறிய முடிந்தது.
வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் காலை 7.00 மணி முதல் கண்காணிப்பு
பணியை போலீசார் மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது வெள்ளம்
வடிந்து வருவதைத் தொடர்ந்து நிலைமை சீரடைந்துள்ளதாக ஷா ஆலம்
மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.
தாமான் ஸ்ரீ மூடா, பெர்சியாரான் புடிமான், பெர்சியாரான் ஜூப்ளி பேராக்,
பெர்சியாரான பெருசஹான், செக்சன் 23, ஜாலான் மாட் ராஜி, பாடாங்
ஜாவா ஆகிய பகுதிகளில் வாகனப் போக்குவரத்தை தாங்கள் கண்காணித்து
வருவதாக அவர் சொன்னார்.
இது தவிர செக்சன் 25/129 ஜாலான் மந்தாப், கூட்டரசு நெடுஞ்சாலை
(15.3வது கிலோ மீட்டரில் மோட்டார் சைக்கிள் தடம்), மற்றும் செக்சன் 19
சுற்றுவட்டாரங்களும் கண்காணிக்கப்படுகின்றன என்றார் அவர்.
கூட்டரசு நெடுஞ்சாலையின் 15.3வது கிலோ மீட்டரில் உள்ள மோட்டார்
சைக்கிள் தடம் போக்குவரத்துக்கு முற்றாக மூடப்பட்டுள்ளது என்றும்
அவர் குறிப்பிட்டார்.


