ஷா ஆலம், ஏப். 11- இன்று அதிகாலை முதல் பெய்து வரும்
கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை
தங்க வைப்பதற்காக கிள்ளான் மற்றும் ஷா ஆலமில் மூன்று தற்காலிக
நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஷா ஆலம் வட்டாரத்தில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதைத்
தொடர்ந்து பெட்டாலிங் மாவட்டத்தில் இரு நிவாரண மையங்கள்
திறக்கப்பட்டதாக பெட்டாலிங் மாவட்ட அதிகாரி ஹசுனுள் கைடில்
முகமது கூறினார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கம்போங் புக்கிட் லஞ்சோங் வட்டாரத்தைச்
சேர்ந்தவர்களைத் தங்க வைப்பதற்காக செக்சன் 28, எம்.பி.எஸ்.ஏ.
கெனாங்கா மண்டபத்தில் நிவாரண மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக
அவர் சொன்னார்.
ஷா ஆலம் செக்சன் 16, தேசிய பள்ளியில் திறக்கப்பட்டுள்ள நிவாரண
மையத்தில் கம்போங் பாடாங் ஜாவாவில் வெள்ளத்தில் பாதிக்கபட்டவர்கள்
தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, கம்போங் பாடாங் ஜாவாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 50
பெரியவர்கள் மற்றும் 10 சிறார்கள் உள்பட 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக
பேரிடர் மேலாண்மைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகது நஜ்வான்
ஹலிமி கூறினார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் பணி தொடர்ந்து
மேற்கொள்ளப்பட்டு வருவதால் துயர் துடைப்பு மையங்களில்
தங்கியுள்ளவர்கள் குறித்த சமீபத்திய தகவலகள் அவ்வப்போது
வழங்கப்பட்டு வரும் என அவர் சொன்னார்.
சுங்கை பிஞ்சாய் தேசிய பள்ளியில் திறக்கப்பட்டுள்ள நிவாரண மையத்தில்
33 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேர் தங்கியுள்ளதாக சமூக நலத்
துறையின் பேரிடர் தகவல் அகப்பக்கம் கூறியது.
இன்று அதிகாலை முதல் பெய்து வரும் அடை மழையின் காரணமாக
ஷா ஆலம், கிள்ளான், பூச்சோங், உலு லங்காட் உள்ளிட்ட பகுதிகளில்
திடீர் வெள்ளம் ஏற்பட்டது.


