கோலாலம்பூர், ஏப். 11- இன்று அதிகாலை முதல் பெய்து வரும்
அடைமழையின் காரணமாக சிலாங்கூர் மாநிலத்தின் பல மாவட்டங்களில்
திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பெட்டாலிங் மாவட்டத்தின் பல
பகுதிகளில் வெள்ளம் 0.61 மீட்டர் வரை உயர்ந்ததாக சிலாங்கூர் மாநில
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி
இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.
பூச்சோங், கம்போங் தெங்காவில் 20 வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட
வேளையில் ஆறு பேர் புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் திறக்கப்பட்டுள்ள
தற்காலிக நிவாரண மையத்தில் அடைக்கம் நாடியுள்ளதாக அவர்
தெரிவித்தார்.
பூச்சோங், கம்போங் ஸ்ரீ அமானில் 30 வீடுகளில் வெள்ளம் ஏற்பட்ட
நிலையில் 120 குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர் என்று அவர் அறிக்கை
ஒன்றில் குறிப்பிட்டார்.
இதனிடையே, ஷா ஆலம், பாடாங் ஜாவாவில் 20 வீடுகள் வெள்ளத்தில்
பாதிக்கப்பட்ட வேளையில் மூவர் பாதுகாப்பான இடத்திற்கு
வெளியேற்றப்பட்டனர்.
கிள்ளான் மாவட்டத்தின் தாமான் ஸ்ரீ ஜெயாவில் வௌளத்தில்
பாதிக்கப்பட்ட எட்டு பேர் சுங்கை பிஞ்சாய் தேசிய பள்ளியில் உள்ள
நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உலு லங்காட்
மாவட்டத்தின் கம்போங் மேராப் லுவார் காஜாங்கைச் சேர்ந்த 15 பேர்
வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இதனிடையே, வெள்ளம் ஏற்பட்ட தாமான் ஸ்ரீ மூடா, புடிமான்
புரேமேனேட், பேராக் ஜூப்ளி புரோமேனேட், செக்சன் 23, ஜாலான் மாட்
ராஜி, பாடாங் ஜாவா உள்ளிட்ட பகுதிகளை தாங்கள் காலை 7.00 மணி முதல் கண்காணித்து வருவதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர்
ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஷா ஆலம் வட்டாரத்தில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதோடு வெள்ளம்
வடியத் தொடங்கிய நிலையில் போக்குவரத்தும் சீரடைந்து வருகிறது என
அவர் குறிபிட்டார்.


