காஜாங், ஏப். 11- மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகள் ஹெந்தியான்
காஜாங்கில் நேற்றிரவு மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 1959/63ஆம்
ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் (சட்டம் 155) கீழ் பல்வேறு குற்றங்களைப்
புரிந்ததற்காக 288 அந்நிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
இந்நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 242 ஆண்கள் மற்றும் 46
பெண்களை உள்ளடக்கிய அவர்கள் அனைவரும் வங்காளதேசம்,
இந்தோனேசியா, மியன்மார், வியட்னாம், பாகிஸ்தான், இந்தியா மற்றும்
இலங்கையைச் சேர்ந்தவர்களாவர் என்று குடிநுழைவுத் துறையின்
துணைத் தலைமை இயக்குநர் (நடவடிக்கை) ஜெப்ரி எம்போக் தாஹா
கூறினார்.
தேசிய பதிவுத் துறை மற்றும் பொது தற்காப்பு படையின் ஒத்துழைப்புடன்
இரவு மணி 7.30 தொடங்கி மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை
நடவடிக்கையின் போது 785 அந்நிய நாட்டினரும் 250 உள்நாட்டினரும்
சோதனையிட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் போது வர்த்தக மையங்கள் மற்றும் அந்நியத்
தொழிலாளர் குடியிருப்புகளை உள்ளடக்கிய ஐந்து மாடி கடைவீடுகள்
கொண்ட ஆறு புளோக்குகள் சோதனையிடப்பட்டன என்று அவர்
சொன்னார்.
கைது செய்யப்பட்ட 18 முதல் 60 வயது வரையிலான அவர்கள்
அனைவரும் அடையாள ஆவணங்கள் இல்லாதது, வருகை அனுமதி
நிந்தனையை மீறியது, அதிக காலம் தங்கியிருந்தது, அங்கீகரிக்கப்படாத
அடையாள அட்டைகளைக் கொண்டிருந்தது உள்ளிட்ட குற்றங்களைப்
புரிந்தது சோதனையில் கண்டறியப்பட்டது என்றார் அவர்.
கைது செய்யப்பட்ட அந்நியத் தொழிலாளர்களில் பலர் உணவங்களிலும்
அருகிலுள்ள தொழிற்சாலைகளிலும் வேலை செய்து வந்துள்ளனர்.
ஆவணங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைக்காக புத்ரா ஜெயா
குடிநுழைவுத் துறைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள்
செமினி குடிநுழைவுத் துறை முகாமில் தடுத்து வைக்கப்படுவர் என்று
அவர் சொன்னார்.


