ஷா ஆலம், ஏப். 11- செத்தியா ஆலமில் உள்ள பல்பொருள் அங்காடிக்
கடை ஒன்றின் எதிரே நிகழ்ந்த வழிப்பறிச் சம்பவம் ஒன்றைச் சித்தரிக்கும்
காணொளி தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையைத்
திறந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரிடமிருந்து நேற்று பிற்பகல் 2.08
மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ்
தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.
செத்தியா ஆலமில் உள்ள 99 ஸ்பீட்மார்ட் கடையில் பொருள்களை
வாங்கிக் கொண்டு வெளியேறும் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக
சம்பந்தப்பட்ட நபர் தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளதாக அவர்
சொன்னார்.
பாதிக்கப்பட்டவரும் அவரின் மனைவியும் கடையிலிருந்து வெறியேறிய
போது சிவப்பு நிற யமஹா 135 எல்சி மோட்டார் சைக்கிளில் வந்த
ஆடவர், காரினால் மோதப்பட்டதால் தமக்கு சேதம் ஏற்பட்டதாக
அவர்களிடம் முறையிட்டுள்ளார்.
அந்த நபரும் உடனடியாக தனது காரில் ஏற்பட்ட சேதத்தை சோதிக்கச்
சென்றுள்ளார். அவர் காரை சோதித்துக் கொண்டிருந்த போது அவரின்
கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பின்புறத்திலிருந்து பறித்துக் கொண்டு
அந்த சந்தேகப் பேர்வழி மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பினார் என
அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை
எனக் கூறிய இக்பால், எனினும், அவர் சுமார் 11,000 வெள்ளி மதிப்புள்ள
சங்கிலியை கொள்ளையனிடம் பறிகொடுத்து விட்டார் என்றார்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 392வது
பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருதாகவும் அவர் சொன்னார்.


