கோலாலம்பூர், ஏப்.11- செராஸ், 9வது மைலில் உள்ள ஒரு தனியார் சிறார் பராமரிப்பு இல்லத்தில் தங்கியுள்ளவர்களை துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் அந்த காப்பகத்தின் உரிமையாளர் மற்றும் பாதுகாவலர்களான கணவன் மற்றும் மனைவி நேற்று கைது செய்யப்பட்டனர்.
பெறப்பட்ட தகவல் மற்றும் விசாரணையின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் 66 மற்றும் 68 வயதுடைய ஆடவரும் பெண்மணியும் நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு கைது செய்யப்பட்டு விசாரணைக்காக இன்று வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
அந்த வளாகத்தின் உரிமையாளர் மற்றும் பராமரிப்பாளர் தம்மைத் திட்டி இடது கன்னத்தில் அறைந்ததாக 18 வயது இளைஞர் ஒருவர் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி இரவு 10.08 மணிக்கு போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
அந்த பராமரிப்பு இல்லத்தின் உரிமையாளர் மற்றும் பராமரிப்பாளரின் பேச்சைக் கேட்காததால் தாம் துன்புறுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் அங்கு சிறார்களை உணர்ச்சி ரீதியாகவும் மனோ ரீதியாகவும் துன்புறுத்தியதாக சந்தேகிக்கப்படும் தங்குமிடத்தின் உரிமையாளர் மற்றும் பராமரிப்பாளரின் நடவடிக்கைகள் குறித்து மற்ற சாட்சிகளால் இரண்டு போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த காப்பகத்தில் வசிக்கும் 18 பேரும் இப்போது சுகாதாரப் பரிசோதனைகள் உட்பட மேல் நடவடிக்கைகளுக்காக சமூக நலத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நாஸ்ரோன் கூறினார்.
இந்த புகார் தொடர்பில் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(ஏ) பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் விசாரணைக்கு உதவ 012-6269 250 என்ற எண்ணில் புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் ஆர். ரவீனைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.


