கோலாலம்பூர், ஏப்ரல் 11 -- சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில் மரணம் ஏற்பட்டதாக தவறான தகவல்களைப் பரப்பிய தரப்பினரை சிலாங்கூர் காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் தலைமையகத்திற்கு பெட்டாலிங் மாவட்ட சுகாதார அலுவலகத்திடமிருந்து புகார் கிடைத்ததாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு விசாரணை திறக்கப்பட்டதாகக் கூறிய அவர்,
தவறான கருத்துகள், கோரிக்கைகள், பரிந்துரைகள் அல்லது தகவல் தொடர்புகளை அனுப்ப இணைய வசதியைப் பயன்படுத்தியதற்காக அவதூறுக்கான குற்றவியல் சட்டத்தின் 500வது பிரிவு மற்றும் 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் விசாரணைகள் நடத்தப்படுகிறது என்று சுபாங் ஜெயாவில் உள்ள சம்பவக் கட்டுப்பாட்டு நிலையத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
முன்னதாக, தீ விபத்தில் மரணம் நிகழ்ந்ததாக கூறும் பொய்யான
சமூக ஊடகக் கருத்துக்கள் குறித்து சுகாதார அமைச்சு காவல்துறையில் புகார் அளித்திருந்தது.
மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திற்கும் (எம்.சி.எம்.சி.) இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றில் தெளிவுபடுத்தியது.
மேலும், இந்த தீவிபத்து சம்பவத்துடன் தொடர்புடைய மரணம் பற்றிய எந்தவொரு புகாரையும் எந்தவொரு அரசாங்க அல்லது தனியார் மருத்துவமனையும் பெறவில்லை என்பதையும் அது வலியுறுத்தியது.
இதற்கிடையில், நேற்று வரை பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து காவல்துறைக்கு 755 புகார்கள் கிடைத்துள்ளதாக ஹூசேன் தெரிவித்தார். இதில் முதன்மையாக வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் தீ விபத்தின் விளைவாக ஏற்பட்ட காயங்கள் குறித்த புகார்கள் விளங்குகின்றன.
நாங்கள் பல்வேறு சாட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து 172 வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 8.10 மணிக்கு ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பு மற்றும் தீ விபத்தில் தீப்பிழம்புகள் 30 மீட்டர் உயரத்திற்கு எழுந்தன. வெப்பநிலை 1,000 டிகிரி செல்சியஸை எட்டியது. தீயை முழுமையாக அணைக்க கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் ஆனது.


