கோலாலம்பூர், ஏப்ரல் 10 - பல வர்த்தகப் பங்காளிகளுக்கு விதிக்கப்பட்ட உயர் வரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கும் அமெரிக்காவின் நடவடிக்கையை மலேசியா வரவேற்பதாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.
அதே வேளையில் இந்த நிலையற்றதன்மை ஆசியான் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க சவால்களை உருவாக்குவதை அவர் ஒப்புக்கொண்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புகளைப் பொறுத்தவரை, நிச்சயமற்ற தன்மையைத் தவிர வேறு எதுவும் உறுதியாக இல்லை என்று அவர் தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாற்றங்களின் தாக்கங்களை மலேசியா தீவிரமாக மதிப்பிட்டு வருகிறது.
மேலும், இடையூறுகளைத் தணிக்கவும், வட்டார பொருளாதார மீட்சியை மேம்படுத்தவும், சமநிலையான மற்றும் கணிக்கக்கூடிய வர்த்தக உறவுகளை ஆதரிக்கவும் ஆசியான் பங்காளிகளுடன் ஒத்துழைப்பதில் மலேசியா உறுதியாக உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
பெர்னாமா


