கோலாலம்பூர், ஏப். 10 - புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பொது உள்கட்டமைப்புகளைச் சீரமைக்க சுபாங் ஜெயா மாநகர் மன்றத்திற்கு (எம் பி.எஸ்.ஜே.) 20 லட்சம் வெள்ளியை வழங்குவதாக வீடமைப்பு மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வார இறுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூட்டுத் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதில் சிலாங்கூர் அரசாங்கத்திற்கு தேசிய திடக்கழிவு மேலாண்மைத் துறை மற்றும் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்பு கழகம் ஆகியவை முழுமையாக உதவும்.
புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீவிர கவனம் செலுத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி, போக்குவரத்து, வீட்டு வாடகை உதவி மற்றும் இலவசக் கார் உள்ளிட்ட பல்வேறு வகையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
தீயினால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைப்பதிலும் பறுநிர்மாணிப்பு செய்வதிலும் முதன்மையாக கவனம் செலுத்தப்படுகிறது என்று அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
கடந்த வாரம் அமைச்சின் கீழுள்ள அனைத்து ஏஜென்சிகளையும் உள்ளடக்கிய ஒரு சிறப்பு பணிக்குழு ஒன்று நிறுவப்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறியது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தீயினால் பாதிக்கப்பட்ட வீடுகளைப் பழுதுபார்ப்பது மற்றும் புனரமைப்பது ஆகியவற்றுக்கான செயல் திட்டத்தையும் பணிக்குழு இறுதி செய்துள்ளது.
அந்த செயல் திட்டம் அவரிடம் (அன்வார்) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று அது குறிப்பிட்டது.


