கோலாலம்பூர், ஏப். 10 - சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் அண்மையில்
ஏற்பட்ட எரிவாயு குழாய் தீவித்தில் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சமூக
ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் சுகாதார அமைச்சு
போலீசில் புகார் செய்துள்ளது.
இவ்விவகாரம் மலேசிய தொடர்பு மற்றும் பல்லுடக ஆணையத்தின்
(எம்.சி.எம்.சி.) கவனத்திற்கும் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அமைச்சு
கூறியது.
இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது தொடர்பில் அரசாங்க மற்றும்
தனியார் மருத்துவமனை நிர்வாகங்களிடமிருந்து எந்த தகவலும் சுகாதார
அமைச்சுக்கு கிடைக்கவில்லை என்று அது குறிப்பிட்டது.
பொது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய இத்தகைய
பொய்ச் செய்திகளைப் பரப்பும் பொறுப்பற்றத் தரப்பினருக்கு எதிராக
கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் என அமைச்சு
இன்று அறிக்கை ஒன்றில் கூறியது.
கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை 8.10 மணியளவில் ஏற்பட்ட இந்த
வெடிச் சம்பவத்தில் சுமார் 30 மீட்டர் உயரத்திற்கு தீ கொளுந்து
விட்டெரிந்தது. பாதிக்க்கப்பட்ட பகுதியில் வெப்ப நிலை 1,000 டிகிரி
செல்சியஸ் வரை உயர்ந்த வேளையில் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு
எட்டு மணி நேரம் பிடித்தது.
இந்த விபத்தில் காயமடைந்த 17 பேர் அரசாங்க மருத்துவமனைகளிலும் 21
பேர் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


