கோலாலம்பூர், ஏப். 10 - இம்மாதம் 1 ஆம் தேதி சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்ட மொத்தம் 190 வீடுகள் வசிப்பதற்குப் பாதுகாப்பானவை என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியப் பின்னர் குடியிருப்பாளர்கள் மீண்டும் அங்கு குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று நிலவரப்படி, பாதிக்கப்பட்ட 487 வீடுகளை தெனாகா நேஷனல் பெர்ஹாட் (டி.என்.பி.), ஆயர் சிலாங்கூர், வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை, பொதுப்பணித் துறை, சுபாங் ஜெயா மாநகர் மன்றம் மற்றும் அரச மலேசியா காவல்துறை உள்ளிட்ட12 தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆய்வு செய்துள்ளதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
இவற்றில் 328 வீடுகள் வசிப்பதற்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன. மேலும் 190 வீடுகள் மீண்டும் குடியேற ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளன. இது தவிர 306 வீடுகளுக்கு டி.என்.பி. மின்சார விநியோகத்தை வழங்கியுள்ளது என ஹூசேன் பெர்னாமாவிடம் அவர் கூறினார்.
இதற்கிடையில், அந்தப் பகுதி காவல்துறையினரின் கடுமையான பாதுகாப்பின் கீழ் இருப்பது சம்பவ இடத்தில் பெர்னாமா நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
மேலும் சிறப்பு அனுமதிச் சீட்டுகளைக் கொண்ட குடியிருப்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நுழைவு அனுமதிக்கப்படுகிறது.


