கோலாலம்பூர், ஏப். 10 - குடிநுழைவுத் துறையின் சோதனையிலிருந்து
தப்புவதற்காக பத்திரிகையாளர் போல் நடித்து ஊடகவியலாளர்கள் மற்றும்
அமலாக்க அதிகாரிகளிடம் நெருக்கத்தைக் காட்டிக் கொள்ள அந்நிய
பிரஜை ஒருவர் கடைபிடித்த தந்திரம் பலிக்காமல் போனது.
தலைநகர், சௌ கிட் மற்றும் செந்துல் பகுதியில் இன்று அதிகாலை
குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் பிடிபட்ட
சட்டவிரோத அந்நியப் பிரஜைகளில் அந்த ஆடவரும் ஒருவராவார்.
சட்டவிரோதக் குடியேறிகளின் புகலிடமாக விளங்கி வரும் சௌகிட்டில்
உள்ள ஹோட்டல் ஒன்றில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
இச்சோதனை நடவடிக்கையின் போது மிகவும் பதற்றத்திற்குள்ளான அந்த
ஆடவர் அதிகாரிகளிடம் மண்டியிட்டு மன்றாடியதோடு தம்மிடம்
செல்லத்தக்க ஆவணங்கள் உள்ளதாகவும் கூறினார்.
பூட்டப்பட்ட ஹோட்டல் அறையின் கதவை திறக்கும்படி கூச்சலிட்ட
போதிலும் சக நண்பர்கள் அவ்வாறு செய்யாததால் மற்றொரு பெண்ணும்
அதிகாரிகளிடம் வசமாகச் சிக்கினார். செல்லத்தக்க ஆவணங்கள் இல்லாதது மற்றும் அனுமதிக்கப்பட்டதை விட அதிக காலம் தங்கியிருந்தது உள்ளிட்ட காரணங்களால் மொத்தம் 32 பேர் இச்சோதனையின் போது கைது செய்யப்பட்டனர்.
மாநகரின் பல பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட
உளவு நடவடிக்கையின் பலனாக இந்த சோதனை நடத்தப்பட்டதாகக்
கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் வான் முகமது சவுபி
வான் யூசுப் கூறினார்.
சௌகிட் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 11 இந்தோனேசியர்கள்,
நான்கு பாகிஸ்தானியர்கள், ஐந்து வங்காளதேசிகள் மற்றும் இரு
தாய்லாந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
செந்துலில் உள்ள நான்கு கடை வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட
சோதனைகளில் மூன்று இந்தோனேசியப் பெண்கள், மூன்று இந்திய
பிரஜைகள், இரு நேப்பாள ஆடவர்கள், ஒரு மியன்மார் பிரஜை மற்றும்
ஒரு பாகிஸ்தானியர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் என்றார் அவர்.


