ஷா ஆலம், பிப். 10 - கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்ட சுபாங் ஜெயா, புத்ரா
ஹைட்ஸ் பகுதியில் இவ்வார இறுதியில் மேற்கொள்ளப்படவிருக்கும்
கூட்டுத் துப்புரவு இயக்கத்தில் சுமார் 1,000 தன்னார்வலர்கள் பங்கேற்பர்
என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளும் முழுமையாக துப்புரவு
செய்யப்படுவதை உறுதி செய்யும் நோக்கிலான இந்த துப்புரவு
இயக்கத்தை மாநில அரசு வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை
அமைச்சுடன் இணைந்து மேற்கொள்கிறது என்ற மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.
எதிர்ரும் சனிக்கிழமை (ஏப்ரல் 12) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13)
ஆகிய இரு தினங்களில் பெரும் எண்ணிக்கையிலானோரின் பங்கேற்புடன்
கூட்டு துப்புரவு இயக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது. திடக்கழிவு
மேலாண்மை மற்றும் பொது துப்புரவுக் கழகம், (எஸ்.டபள்யு.கார்ப்),
பந்தாஸ் எனப்படும் சிறப்பு நடவடிக்கை குழு, டீம் சிலாங்கூர், செர்வ்
எனப்படும் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பு ஆகியவற்றின்
உறுப்பினர்கள் இதில் பங்கேற்பர். என்று அவர் சொன்னார்.
இந்த துப்புரவு இயக்கத்தில் ஆயிரம் பேர் வரை பங்கேற்கவுள்ளதாகக்
கூறிய அவர், பாதுகாப்பானவை என அறிவிக்கப்பட்ட 270 வீடுகளின்
குடியிருப்பாளர்கள் சௌகர்யமான முறையில் வீடு திரும்புவதற்கு
ஏதுவாக துப்புரவுப் பணி மிகவும் விரிவான அளவில் மேற்கொள்ளப்படும்
என்றார்.
இந்த துப்புரவு இயக்கத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் செர்வ்
அமைப்பில் பதிவு செய்து கொள்ளும்படி தாம் கேட்டுக் கொள்வதாக
மாநில அரசு தலைமையகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர்
சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதிக எண்ணிக்கையிலான தன்னார்வலர்களால் வட்டார
குடியிருப்பாளர்களுக்கு அசௌகர்யம் ஏற்படுவதைத் தவிர்க்கவும் அவர்
தன்னார்வலர்களை முறையாக வழிநடத்தவும் முறையான பதிவு
தேவைப்படுகிறது என்றார் அவர்.


