புத்ராஜெயா, ஏப். 10 - காப்பாரில் கடந்தாண்டு பிளாக் ஷேப் கேப்ரியல் பிகே
160டிஆர் விமான விபத்துக்குள்ளானதற்கு விமானி விமானத்தைப்
பொறுப்பற்ற முறையிலும் அதிக வேகத்திலும் செலுத்தியதே காரணம்
என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த விமானம் அதிக எடையைக் கொண்டிருந்த காரணத்தால் அதன்
கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பட்டு பயணத்தின் போது விரிசல் ஏற்பட்டது
என்று அந்த விபத்து தொடர்பான இறுதிக் கட்ட விசாரணை அறிக்கை
தெரிவித்தது.
அதிக வேகம், கூடுதல் எடை உள்பட அனுமதிக்கப்பட்ட செயல்திறனையும்
மீறி விமானத்தின் செயல்பாட்டின் மீது தொடர்ச்சியாக அழுத்தம்
தரப்பட்டதால் அதன் கட்டமைப்பில் பலவீனம் ஏற்பட்டது என இன்று
வெளியிடப்பட்ட போக்குவரத்து அமைச்சின் விமான விபத்து மீதான
விசாரணை மையத்தின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் டை-டாவுன்-ரிங்ஸ் உள்பட அங்கீகரிக்கப்படாத பாகங்கள்
விமானத்தில் பொருத்தப்பட்டதால் அது வலுவிழந்து செயல்பட முடியாத
நிலைக்கு தள்ளப்பட்டது என்று போக்குவரத்து அமைச்சின் அகப்பக்கத்தில்
வெளியிடப்பட்ட அந்த அறிக்கை கூறியது.
விமானியின் செயல்பாடு, விமானப் பராமரிப்பு, நிர்வாக முறை மற்றும்
செயலாக்கத்தில் காணப்பட்ட பலவீனம் ஆகியவை அந்த விமான
விபத்துக்கு காரணமாக இருந்ததாக அந்த 204 பக்க அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விமானம் அங்கீகரிக்கப்படாத பராமரிப்பு நடைமுறையைப்
பின்பற்றியுள்ளது. அங்கீகாரம் இல்லாத உபரிபாகங்களைப் பயன்படுத்தியது,
தகுதி இல்லாதப் பணியாளர்கள் ஆகியவை பயணத்தின் போது அந்த
விமானத்தின் செயல்திறனில் பாதிப்பை உண்டாக்கியது.
மேலும், பயணத்தின் போது விமானியின் இரத்தத்தில் காணப்பட்ட
மதுவின் அடர்த்தி அளவு சட்டத்தில் அனுமதிக்கப்பட்டதை விட (0.02)
அதிகமாக அதாவது 0.032ஆக இருந்தது என்று அவ்வறிக்கை
சுட்டிக்காட்டியது.


