புத்ராஜெயா, ஏப்ரல் 10 : 13வது தொற்றுநோயியல் வாரத்தில் (ME13) டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தோடு (1,129) ஒப்பிடும்போது 1,021ஆக குறைந்துள்ளது. அதே சமயம் இறப்பு ஏதும் பதிவாகவில்லை.
இக்காலக்கட்டத்தில் 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 44,144 டிங்கி சம்பவங்கள் பதிவான நிலையில் இவ்வாண்டு அதன் எண்ணிக்கை 16,296 ஆக உள்ளது என்று சுகாதார இயக்குநர்
ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.
மேலும், கடந்தாண்டு இந்த காலக்கட்டத்தில் மொத்தம் 31 இறப்புகள் பதிவாகியிருந்த நிலையில் அதன் எண்ணிக்கை இவ்வாண்டு 10ஆக குறைந்துள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
மேலும், தொற்றுநோயியல் 13வது வாரத்தில் 21 ஹாட்ஸ்பாட் இடங்கள்
பதிவாகியுள்ளன என்று அவர் கூறினார்.
அதாவது சிலாங்கூரில் 14 இடங்களும், கோலாலம்பூர், புத்ராஜெயாவில் 3 இடங்களும், சபாவில் 2 இடங்களும் மற்றும் நெகிரி செம்பிலான் மற்றும் கெடாவில் தலா ஓர் இடமும் பதிவாகியுள்ளன.
– பெர்னாமா


