கோலாலம்பூர், ஏப். 9 - மலேசியாவுக்கான பிரிட்டிஷ் தூதராக அஜயா சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூரில் உள்ள பிரிட்டிஷ் இன்று தெரிவித்தது. ஐல்சா டெர்ரி சிஎம்ஜிக்குப் பதிலாக அஜய் இப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இது சர்மாவின் நான்காவது தூதர் நிலையிலானப் பதவியாகும் என்று தூதரகம் கூறியது.
அவர் 2013 முதல் 2015 வரை ஈரானுக்கான இங்கிலாந்து தூதரகப் பொறுப்பதிகாரியாகவும் 2015 முதல் 2020 வரை கத்தாருக்கான பிரிட்டிஷ் தூதராகவும், 2022 முதல் 2023 வரை துருக்கிக்கான தூதரகப் பொறுப்பு அதிகாரியாகவும் இருந்தார். மேலும், சர்மா மாஸ்கோவிலும் பாரிஸிலும் பிரான்சுக்கான துணைத் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு சர்மா அமைச்சரவை அலுவலகத்தின் தேசிய பாதுகாப்பு செயலகத்தில் அனைத்துலக விவகாரங்களுக்கான இயக்குநராகவும் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் என்று தூதரகம் இன்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
தனது 30 ஆண்டுகால அரசதந்திர வாழ்க்கையில் பல அனைத்துலகப் பேச்சுவார்த்தைகளில் சர்மா ஈடுபட்டுள்ளார். 2021-2022 சைப்ரஸ் தீர்வுக்கான இங்கிலாந்து பிரதிநிதியாகவும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கான துணை பேச்சுவார்த்தையாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
லண்டனில் பிறந்த சர்மா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். பிரெஞ்சு மற்றும் துருக்கிய மொழிகளில் சரளமாகப் பேசக்கூடிய இவர், தற்போது மலாய் மொழியைக் கற்று வருகிறார்.
அடுத்த சில வாரங்களில் அவர் தனது குடும்பத்தினருடன் மலேசியாவுக்கு வந்து தனது பொறுப்பை ஏற்கவுள்ளார். சர்மா வரும் வரை டேவிட் வாலஸ் தூதராகப் பொறுப்பு வகிப்பார்.


