கப்பளா பாத்தாஸ், ஏப். 9 - இல்லாத இணைய முதலீட்டு மோசடியில் சிக்கிய சுகாதாரத் துறை பணியாளர் ஒருவர் 12 லட்சம் வெள்ளிக்கும் அதிகமானத் தொகையைப் பறிகொடுத்தார்.
இந்த மோசடி தொடர்பில் 58 வயதான பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு கடந்த வெள்ளிக்கிழமை
புகாரைப் பெற்றதாக செபராங் பிறை உத்தாரா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அனுவார் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் கடந்த 20 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு முகநூல் சமூக ஊடகத்தில் வெளியான முதலீட்டு விளம்பரத்தை நம்பி அதில் முதலீடு செய்த பணத்தை தாம் இழந்ததாக அந்த நபர் அந்த நபர் தனது புகாரில் கூறியுள்ளார் என அவர் சொன்னார்.
வழங்கப்பட்ட முதலீட்டுத் தொகுப்பில் பங்கேற்க ஆர்வம் கொண்ட அந்த நபர் பல்வேறு பரிவர்த்தனைகள் வாயிலாக ஏழு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை அனுப்பியுள்ளார். முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தில் 500 முதல் 800 விழுக்காடு வரை வருமானம் ஈட்ட முடியும் என அவருக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இருப்பினும், இன்றுவரை முதலீட்டின் வழி எந்த வருமானமும் கிடைக்கவில்லை என்பதால் இந்த மோசடி தொடர்பாக அவ்வாடவர் காவல்துறையில் புகார் அளித்தார் என்று அவர் கூறினார்.
இந்த மோசடி புகார் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


