புத்ரா ஜெயா, ஏப். 9 - சிலாங்கூர் மாநிலத்திற்கு இவ்வாண்டு 1 கோடியே 47
லட்சம் வெள்ளி பேரிடர் உதவி நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த
நிதியை நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின்
வாயிலாக மத்திய அரசு வழங்கியுள்ளது.
பேரிடரில் பாதிக்கப்படும் குடும்பத் தலைவருக்கு கருணைத் தொகையாக
1,000 வெள்ளியும் பேரிடரில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு 10,000
வெள்ளியும் வழங்குவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று
நட்மாவின் தலைமை இயக்குநர் டத்தோ கைருள் ஷாரில் இட்ருஸ்
கூறினார்.
கடந்த வாரம் சுபாங் ஜெயாவில் நிகழ்ந்த எரிவாயு குழாய் தீவிபத்தில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கவும் இந்த நிதி
பயன்படுத்தப்படும் என்று அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.
சமூக நலத்துறையிடம் பதிவு செய்தவர்களின் பெயர்ப் பட்டியல்
அடிப்படையில் இந்த உதவித் தொகையை மாவட்ட பேரிடர் மேலாண்மை
செயல்குழு என்ற முறையில் மாவட்ட மற்றும் நில அலுவலகம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் என அவர் தெரிவித்தார்.
இந்த தீவிபத்தில் வீடுகள் முற்றாக அழிந்த உரிமையாளர்களுக்கு தலா
10,000 வெள்ளி வழங்கப்படும். இந்த தொகையில் 5,000 வெள்ளியை மத்திய
அரசும் எஞ்சியத் தொகையை பெட்ரோனாஸ் நிறுவனமும் பகிர்ந்தளிக்கும்
என்று அவர் குறிப்பிட்டார்.
வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்த உரிமையாளர்களுக்கு மத்திய அரசின்
சார்பாக 2,500 வெள்ளியும் பெட்ரோனாஸ் சார்பாக 2,500 வெள்ளியும்
வழஙகப்படும். இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் பழுதுபார்க்கப்படும் வரை
அல்லது மறு நிர்மாணிப்பு செய்யப்படும் வரை மாதம் 2,000 வெள்ளி வீதம் ஆறு மாதங்களுக்கு தலா 2,000 வெள்ளியை வழங்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அவர் சொன்னார்.


