கோலாலம்பூர், ஏப். 9 - கேபிள் திருட்டு காரணமாக நேற்றும் இன்று அதிகாலையும் கே எல்.ஐ.ஏ. எக்ஸ்பிரஸ் மற்றும் டிரான்சிட் இரயில் சேவைகளில் தொடர்ச்சியான இடையூறு ஏற்பட்டுள்ளதாக அவ்விரு சேவைகளையும் நிர்வகித்து நிறுவனமான எக்ஸ்பிரஸ் ரயில் லிங்க் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
திருடர்களின் நாசவேலையினால் பண்டார் தாசேக் செலாயாங்கில் உள்ள சமிக்ஞை அமைப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
முதல் கேபிள் துண்டிப்பு சம்பவம் நேற்று காலை சுமார் 6.20 மணியளவில் சாலாக் திங்கி நிலையத்திற்கும் கே.எல்.ஐ.ஏ. டி1 நிலையத்திற்கும் இடையே 48.5வது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது. இதனால் காலை நெரிசல் நேரத்தில் பயணிகள் பயண தாமதத்தை சந்தித்தனர்.
இரண்டாவது கேபிள் திருட்டு நேற்று மாலை 5.52 மணிக்கு புத்ராஜெயா, சைபர்ஜெயா மற்றும் சாலாக் திங்கி இடையே 43.1 வது கிலோ மீட்டரில் ஏற்பட்டது.
நேற்றிரவு 9.57 மணிக்கு பண்டார் தாசேக் செலாத்தான் நிலையத்தில் இதேபோன்ற மற்றொரு சம்பவம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து அந்தப் பாதையில் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.
இன்று அதிகாலை 4.47 மணி மற்றும் 5.20 மணி அளவில் மீண்டும் தங்கள் கைவரிசையைக் காட்டிய கொள்ளையர்கள் . கேபிள்களை வெட்டிச் சென்றதைத் தொடர்ந்து சாலாக் திங்கி, புத்ராஜெயா, சைபர்ஜெயா மற்றும் கேஎல் சென்ட்ரல் இடையிலான ரயில் சேவைகளில் மேலும் இடையூறு ஏற்பட்டது.
அனைத்து சேவைகளையும் மீட்டெடுக்க கடுமையாக முயன்று வருவதாக எக்ஸ்பிரஸ் ரயில் லிங்க் நிறுவனம் அனைத்து ரயில் பயணிகளுக்கும் உறுதியளித்துள்ளது.


