ஷா ஆலம், ஏப். 9 - சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க ஸ்ரீ செர்டாங் தொகுதி கிட்டத்தட்ட 30,000 வெள்ளியைச் செலவிட்டுள்ளது.
இந்த தீச்சம்பவம் நிகழ்ந்த முதல் நாளான ஏப்ரல் 1 ஆம் தேதி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடைகள், மருந்துகள் மற்றும் ரொக்கம் போன்ற உடனடி உதவிகள் வழங்கப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ் அஸ்மி தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்த தினத்தன்று குடியிருப்பாளர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்காத நிலையில் நாங்கள் விரைந்து சென்று அவர்களுக்கு உடைகள், மருந்துகள் மற்றும் குடிநீர் ஆகியவற்றை வழங்கினோம் என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
இப்போது பல அரசு சாரா நிறுவனங்களும் தன்னார்வலர்களும் இது போன்ற தேவைகளை வழங்க முன்வந்துள்ளனர். ஸ்ரீ செர்டாங் தொகுதியிலுள்ள உள்ள கம்போங் தெங்கா மற்றும் கம்போங் கோல சுங்கை பாரு ஆகிய பகுதிகளில் 130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அப்பாஸ் கூறினார்.
உதவி பெறுவதில் யாரும் விடுபடாமல் இருப்பதை எங்கள் சேவை மையம் உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒன்றுபட்டு நிற்கும் வகையிலும் அவர்களின் துயரில் பங்கு கொள்ளும் விதமாகவும் தொகுதி நிலையிலான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம் இவ்வாண்டு நடத்தப்படாது என்றும் அவர் கூறினார்.
மக்கள் துன்பத்திலும் சோகத்திலும் இருக்கும் இந்த நேரத்தில் அவர்கள் அதிலிருந்து மீண்டு வர நாம் எவ்வாறு உதவ முடியும் என்பதில் கவனம் செலுத்துவதுதான் சரியானது என்றார் அவர்.
கடந்த 1ஆம் தேதி நிகழ்ந்த இந்த சம்பவத்தில் எரிவாயு குழாயிலிருந்து ஏற்பட்ட வெடிப்பு 500 மீட்டர் சுற்றளவில் வாகனங்கள் மற்றும் கட்டிடங்களை பாதிப்புக்குள்ளாக்கியது.


