சுபாங் ஜெயா, ஏப். 9 - இங்குள்ள புத்ரா ஹைட்ஸ், ஜாலான் புத்ரா
ஹைட்ஸ் ஹர்மோனியில் நிகழ்ந்த எரிவாயு குழாய் தீ விபத்தில் ஏற்பட்ட
மரணத்தை தாங்கள் மறைத்து விட்டதாகக் கூறப்படுவதை சிலாங்கூர்
மாநிலக் காவல் துறை மறுத்துள்ளது.
சில தரப்பினர் கூறுவது போல் மரணத்தை மறைக்கும் செயலால் எந்த
தரப்பினருக்கும் குறிப்பாக வெளிப்படையான முறையில் விசாரணையை
நடத்தி வரும் அரசு நிறுவனங்களுக்கு எந்த நன்மையும் விளைந்து விடப்
போவதில்லை என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ
ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
அந்த குற்றச்சாட்டில் (மரணம்) உண்மை இல்லை. மலேசியாவில் எந்த
மரணத்தையும் நாங்கள் மறைத்ததில்லை. அவ்வாறு செய்வதால் எந்த
நன்மையும் விளையப்போவதில்லை. மரணம் நிகழ்ந்தது உண்மையானால்
உடனடியாகப் போலீசில் புகார் செய்யுங்கள். மக்களுக்கு சங்கடத்தை
ஏற்படுத்தும் வகையில் அடிப்படையற்றக் குற்றச்சாட்டுகளை சுமத்த
வேண்டாம் என அவர் எச்சரித்தார்.
காவல் துறை உள்பட அனைத்து துறைகளும் மிகவும் வெளிப்படையாக
நடந்து கொள்வதோடு அறிக்கை தயாரிப்பதிலும் விசாரணை
மேற்கொள்வதிலும் தனித்தனியாகச் செயல்படுகின்றன என்றார் அவர்.
இவ்விவகாரத்தில் யாரும் பாதுகாக்கப்பட மாட்டார்கள் எனக் கூறிய
ஹூசேன், சுற்றுச்சூழல், நடவடிக்கை, பாதுகாப்பு, கண்காணிப்பு உள்பட
அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று
அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, முன்னதாக சம்பவ இட கட்டுப்பாட்டு மையத்தில்
நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஹூசேன், இந்த தீவிபத்து
தொடர்பில் காவல் துறையினர் 675 புகார்களை இதுவரை பெற்றுள்ள வேளையில் பாதுகாவலர்கள் உள்பட 186 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் என்றார்.


