சுபாங் ஜெயா, ஏப். 9 - இங்குள்ள புத்ரா ஹைட்ஸ் பகுதியில் எரிவாயு
குழாய் தீவிபத்து ஏற்பட்ட பகுதியில் நிலத்தைத் தோண்டும் பணி நாளை
தொடங்கும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ
ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
சம்பவ இடத்தில் பைலிங் எனப்படும் இரும்புத் துண்களைப் பதிக்கும் பணி
முற்றுப் பெற்றவுடன் மண்ணைத் தோண்டும் நடவடிக்கை
தொடங்கப்படும் என்று அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்ட பகுதியில் மண்ணை நிலைப்படுத்தும் பணி தற்போது
மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இப்பணி தற்போது 30
விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளது என்றார்.
வெடிப்பு மற்றும் தீவிபத்து ஏற்பட்ட அப்பகுதியில் குழாய்களைக் கொண்டு
மண்ணை வலுப்படுத்தும் பணியில் தொழில்நுட்ப துறைகளான அரச
மலேசிய போலீஸ் படை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, வேலையிட
பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை பொதுப்பணி இலாகா, பெட்ரோனாஸ்
ஆகிய தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
நிலத்தை வலுப்படுத்தும் பணிகள் 30 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளன.
அதன் பின்னர் பைலிங் வேலைகள் தொடங்கும். இந்த பைலிங் பணிகள்
நாளை முற்றுப்பெறும் என எதிர்பாக்கப்படும் வேளையில் அதன் பின்னர்
அங்கு மண்ணைத் தோண்டும் நடவடிக்கை தொடங்கப்படும் என அவர்
சொன்னார்.
இந்த வெடிவிபத்து தொடர்பான முழுமையான அறிக்கை இரு
வாரங்களில் தயாராகி விடும் எனக் கூறிய அவர், நிர்ணயிக்கப்பட்ட
காலத்திற்கு முன்பாகவே அந்த அறிக்கை தயாராவதற்கான வாய்ப்பு
உள்ளது என்றார்.
இந்த விபத்து நிகழ்வதற்கு முன்னர் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட
மண் தோண்டும் பணிகள் உள்பட இச்சம்பவம் குறித்து 24 மணி நேரமும்
ஆய்வு, கண்காணிப்பு மற்றும் விசாரணையை கனிமவளம் மற்றும் புவி
அறிவியல் துறை, வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை உள்ளிட்ட
தொழில்நுட்ப நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன என்றார் அவர்.


