கோலாலம்பூர், ஏப். 9 - கோலாலம்பூர் மாநகர் மன்ற (டி.பி.கே எல்.) அமலாக்க அதிகாரிகளுக்கு எதிராக சமூக ஊடகங்கள் வழியாக மிரட்டல் விடுத்த சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட அமலாக்க அதிகாரி நேற்று பிற்பகல் 1.07 மணிக்கு செய்த புகாரைத் தொடர்ந்து 57 வயதான அந்த நபர் நள்ளிரவு 12.10 மணிக்கு செராஸ் மாவட்ட காவல் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறைப் பிரிவால் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமது இசா தெரிவித்தார்.
மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் நிந்தனைக் கூறுகளைக் கொண்ட அறிக்கைகள் அடங்கிய வாட்ஸ்அப் உரையாடலின் ஸ்கிரீன் ஷாட் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டது தொடர்பில் இப்புகார் செய்யப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
சட்டத்தை அமல்படுத்தும் பணியை செய்யும் அரசு ஊழியர்களுக்கு எதிரான மிரட்டல் மற்றும் தூண்டுதலின் ஒரு வடிவமாக சந்தேக நபரின் அந்த நடவடிக்கை அமைந்துள்ளது
என்று ருஸ்டி விவரித்தார்.
அந்த சந்தேக நபருக்கு எதிராக நேற்று பெறப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவு இன்றுடன் முடிவடைகிறது என்றும் அவர் கூறினார்.
குற்றவியல் மிரட்டல் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 506வது பிரிவு, பொதுமக்களைத் தூண்டி விடும் வகையிலான அறிக்கைகளை வெளியிட்டதற்காக தண்டனைச் சட்டத்தின் 505(பி) பிரிவு, இணைய வசதிகளை முறையற்ற முறையில் பயன்படுத்தியதற்காக 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவு ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.


