சுபாங் ஜெயா, ஏப். 8 - புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீவிபத்தில்
பாதிக்கப்பட்டவர்களின் தற்காலிக பயன்பாட்டிற்காக இதுவரை 140 கார்கள்
விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஒரு மாதக் காலத்திற்கு கார்களை தற்காலிகமாக இரவல் பெறுவதற்கு
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களிடமிருந்து 190 விண்ணப்பங்களைப்
பெற்றதாகப் போக்குவரத்துக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ
ஹான் கூறினார்.
டான் சோங் நிறுவனம் வழங்கிய 30 கார்களை இன்று பாதிக்கப்பட்டவர்களிடம் வழங்கினோம். சார்ஜர் வசதி உள்ளவர்களுக்கு மூன்று மின்சாரக் கார்கள் (இ.வி.) வழங்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் 60 கார்கள் இவ்வாரம் கட்டங் கட்டமாக வழங்கப்படும். தீ விபத்தில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு கார்களை இரவல் தந்து உதவிய அனைத்து
நிறுவனங்களுக்கும் மாநில அரசின் சார்பாக நான் நன்றி தெரிவித்துக்
கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
இங்குள்ள புத்ரா ஹைட்ஸ் எல்.ஆர்.டி. இலகு ரயில் நிலையத்தில் டான்
சோங் குழுமத்தின் கார்களை பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கும்
நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக்
குறிப்பிட்டார்.
அந்த பேரிடரில் தங்கள் வாகனங்களை இழந்த குடியிருப்பாளர்களின்
தற்காலிக பயன்பாட்டிற்காக கார்களை தந்து உதவ ஐந்து வாகன
நிறுவனங்கள் முன்வந்ததாக அவர் மேலும் சொன்னார்.
செரி, டான் சோங் குழும ம், கார்சம், கார்ரோ மற்றும் இயோன்
ஆகியவையே அந்த ஐந்து நிறுவனங்களாகும் என்றார் அவர்.
அந்த ஐந்து நிறுவனங்களும் 200 கார்களை ஏற்பாடு செய்துள்ளன. இது
வரை எங்களுக்கு 190க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
அனைவருக்கும் வழங்கியது போக இன்னும் ஐந்து அல்லது ஆறு
வாகனங்கள் எஞ்சியிருக்கும். ஆகவே, விண்ணப்பம் செய்த
அனைவருக்கும் போதுமான கார்கள் இருக்கும் என்று அவர் மேலும்
கூறினார்.


