கோலாலம்பூர், ஏப். 8 - சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு கூடுதல் பங்களிப்புகள் மற்றும் வாடகை உதவி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்பு அறிவித்த உதவித் தொகை தவிர்த்து பெட்ரோனாஸ் நிறுவனத்திடமிருந்து கூடுதலாக 5,000 மற்றும் 2,500 நன்கொடை வழங்கப்பட்டுள்ளது என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வீடுகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு உதவித் தொகை வழங்கப்படும். வீடுகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் 10,000 வெள்ளியும் பகுதியளவு வீடுகள் சேதமடைந்த உரிமையாளர்கள் மற்றும் வாடகைக்கு இருப்போருக்கு 5,000 வெள்ளியும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதுதவிர, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு 2,000 வெள்ளி வாடகை உதவியை மாநில அரசு வழங்கும் எனக்கூறிய அவர், ஒவ்வொரு வீட்டின் பழுதுபார்க்கும் காலத்தைப் பொறுத்து இந்த உதவித் திட்டத்திற்கு 74 லட்சம் வெள்ளி வரை நிதி செலவு ஏற்படும் என்று குறிப்பிட்டார்.
வீடுகள், சாலைகள், உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகளுக்கான மறுசீரமைப்பு முறைகள் உள்ளிட்ட மீட்பு பணிகளை வழிநடத்த சிலாங்கூர் துணை மாநில செயலாளரும் (மேம்பாடு) மாநிலப் பொருளாதார திட்டமிடல் பிரிவின் இயக்குநருமான டத்தோ ஜோஹரி அனுவார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், அரசாங்கமும் தொடர்புடைய நிறுவனங்களும் ஏற்கனவே பல்வேறு வகையான உதவிகளை வழங்கியிருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்க உதவுவதற்காக அதிகமான பெரு நிறுவனங்கள் முன்வரும் என்று பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அஸ்மான் அபிடின் நம்பிக்கை தெரிவித்தார்.


