நிபோங் திபால், ஏப். 8 - பகடிவதையில் ஈடுபட்ட ஏழு மாணவர்களை
எம்.ஆர்.எஸ்.எம். எனப்படும் மாரா இளநிலை அறிவியல் கல்லூரியிலிருந்து
நீக்க அக்கல்லூரியின் கட்டொழுங்கு செயல்குழு பரிந்துரைத்துள்ளதாக
மாரா தலைவர் டத்தோ டாக்டர் அஷராப் வாஜ்டி டுசுக்கி கூறினார்.
இத்தகைய செயலில் ஈடுபட்டது உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்ட
மாணவர்களின் மேல் முறையீட்டை தமது அலுவலகம் பரிசீலிக்காது
என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
இந்த பகடிவதையில் ஏழு மாணவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்களில்
இருவர் உடல் ரீதியாக பகடிவதை செய்துள்ளனர். எஞ்சிய ஐவர்
அவர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். எம்.ஆர்.எஸ்.எம். கல்லூரியில்
கல்வியைத் தொடர்வதிலிருந்து அவர்களை நிறுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
டான்ஸ்ரீ, டத்தோ அல்லது செல்வாக்குமிக்கவர்களின் பிள்ளையாக
இருந்தாலும் பகடிவதை என வரும் போது உறுதியான மற்றும்
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முறையீடு செய்வதற்கு என்னை
அணுகும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம் என அவர்
வலியுறுத்தினார்.
நான் மாரா தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து ‘கைவைத்தால் நீ
வெளியேற வேண்டும்‘ என்ற கோட்பாட்டை நான் தொடர்ந்து வலியுறுத்தி
வந்துள்ளேன். ஆகவே இரண்டாம் வாய்ப்பு வழங்குவதில் எனக்கு
உடன்பாடில்லை என்றார் அவர்.
எம்.ஆர்.எஸ்.எம். உள்பட எந்த மாரா கல்விக் கூடத்திலும் பகடிவதை
கலாசாரத்திற்கு ஒருபோதும் இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


