ஷா ஆலம், ஏப். 8 - இம்மாதம் 1ஆம் தேதி சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீவிபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 265 மாணவர்களுக்கு உதவுவதற்காக எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம் 132,500 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் படிவம் வரை பயிலும் அந்த மாணவர்கள்
ஒவ்வொருவருக்கும் தலா 500 வெள்ளி வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என்று எம்.பி.ஐ. அறவாரியத்தின் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.
தங்கள் படிப்புக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதற்கும் அன்றாட பள்ளிச் செலவுக்கும் அந்த தொகையை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அவர் சொன்னார்.
இந்த உதவித் தொகையை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வரும் வெள்ளிக்கிழமை புத்ரா ஹைட்ஸ் தற்காலிக பேரிடர் நிவாரண மையத்தில் மாணவர்களிடம் வழங்குவார் என்று அஸ்ரி மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
மாநில கல்வித் துறையிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த உதவிக்கு தகுதியுள்ள மாணவர்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது மாணவர்களுக்கு வழங்கப்படும் பிரத்தியேக நிதியுதவியாக விளங்குகிறது. தற்காலிக நிவாரண மையத்தின் நடவடிக்கைகளுக்காக சம்பவம் நிகழ்ந்த முதல் நாளன்று நாங்கள் 10,000 வெள்ளியை வழங்கினோம் என்றார் அவர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு தொடங்கியுள்ள பிரிஹாத்தின் சிலாங்கூர் நிதிக்கு எம்.பி.ஐ. கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கும் எனவும் அவர் சொன்னார்.


