கோலாலம்பூர், ஏப். 8 - மலேசியா ஸ்வீடன் நாட்டின் முதலீட்டிற்கு ஒரு முக்கியமான இடமாக விளங்குகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி 777 கோடி வெள்ளி மதிப்புள்ள 97 தொழிலியல் திட்டங்களில் அது முதலீடு செய்துள்ளது.
இந்த அடைவு நிலையைப் பகிர்ந்து கொண்ட முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருல் அப்துல் அஜிஸ், இந்த முதலீடுகள் 5,982 வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது என்றார்.
கடந்தாண்டு எங்கள் இருதரப்பு வர்த்தக மதிப்பு 358 கோடி வெள்ளியை எட்டியது. இது மலேசியாவிற்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான வலுவான பொருளாதார ஒத்துழைப்புக்கு சான்றாகும் என்று அவர் எக்ஸ் சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட சமீபத்திய பதிவில் கூறினார்.
நாட்டிற்கான ஸ்வீடனின் புதிய தூதர் நிக்லாஸ் வைபெர்க்கின் வருகையை முன்னிட்டு அவர் அந்தப் பதிவினை வெளியிட்டிருந்தார்.
பிபல இசை தளமான ஸ்பாடிபை, ஆடை உற்பத்தியாளர் எச்&எம், உபகரண உற்பத்தியாளரான எரிக்சன், வாகன உற்பத்தியாளரான வோல்வோ மற்றும் பல்பொருள் அங்காடி இகியா போன்ற பல பிரபலமான ஸ்வீடன் நிறுவனங்கள் மலேசியாவில் செயல்படுவதாக தெங்கு ஸபப்ருல் கூறினார்.
மலேசியாவிற்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் பரஸ்பர நன்மைக்காக தொடர்ந்து வளரும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.


