கோலாலம்பூர், ஏப். 8 - முகநூல் மற்றும் டிக் டாக்கில் 3ஆர் (இனம், சமயம் மற்றும் ஆட்சியாளர்கள்) தொடர்புடைய தவறான மற்றும் மிகவும் புண்படுத்தக்கூடிய உள்ளடக்கத்தைப் பதிவேற்றியதாகக் கூறப்படும் இரு ஆடவர்களுக்கு எதிராக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) நான்கு விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளது.
மேல் விசாரணைக்கு உதவுவதற்காக சைபர்ஜெயாவில் உள்ள எம்.சி.எம்.சி. தலைமையகத்தில் நேற்று சம்பந்தப்பட்டவர்களுடன் நேர்காணல்கள் நடத்தப்பட்டதாக எம்.சி.எம்.சி. தெரிவித்தது.
இரண்டு நபர்களில் ஒருவர் ஒரு செல்வாக்கு மிக்க அரசியல் ஆர்வலர் ஆவார். இவர் பேராக் மாநில கீதம், பெட்ரோனாஸ் மற்றும் கேஸ் மலேசியா பெர்ஹாட் போன்ற ஏகபோகங்களை உடைப்பதன் மூலம் மலாய்க்காரர்களின் பொருளாதார ஆதிக்கத்தை வலுப்படுத்துவது மற்றும் கோலாலம்பூர் டவர் கோபுரத்தை கைப்பற்றுவது உள்ளிட்ட இன உணர்வுகளை தூண்டும் கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார் எம்.சி.எம்.சி வெளியிட்ட அறிக்கை கூறியது.
மேலும், தடயவியல் ஆய்வுக்காக சந்தேக நபருக்குச் சொந்தமான கைப்பேசி மற்றும் சிம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.
இதனிடையே 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233 (1) (ஏ) பிரிவின் கீழ் குற்றம் தொடர்பான விசாரணைக்காக மற்றொரு சந்தேக நபரின் கைப்பேசியை போலீசார் பறிமுதல் செய்ததாக எம்.சி.எம்.சி தெரிவித்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 500,000 வரை அபராதம் அல்லது அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க இச்சட்டப் பிரிவு வகை செய்கிறது.
நாட்டில் இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு 3ஆர் தொடர்பான உள்ளடக்கத்தையும் பதிவேற்றுவதைத் தவிர்த்து சமூக ஊடக தளங்களை பொறுப்புடன் பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


