கோலாலம்பூர், ஏப். 8 - மியான்மரில் இருந்த ஒவ்வொரு நாளும்
பூகம்பத்திற்கு பிந்தைய நில அதிர்வை நாங்கள் உணர்ந்தோம். அந்த
அதிர்வு ரிக்டர் அளவில் குறைந்த பட்சம் 3.0 ஆகவும் அதிகப் பட்சம் 5.2
ஆகவும் இருந்தது.
எனினும். இந்த அதிர்வு பாதிக்கபட்டவர்களை கூடுமானவரை காப்பாற்றும் எங்களின் உணர்வுகளை ஒருபோதும் பலவீனமாக்கவில்லை என்று மாஸ்-01 உறுப்பினர்கள் கூறினர்.
பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் செயலி எங்கள் குழுவிடம் இருந்தது. அதனைக் கொண்டு ஒவ்வொரு நாளும் தரவுகளைப் புதுப்பித்து வந்தோம்.
நில அதிர்வை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எப்போதும் தரையில் இருக்கும்
அணுகுமுறையைக் கையாண்டோம். மேலும் பாதிப்பைக் குறைப்பதற்கு
சொந்தமாக கூடாரங்களை அமைத்துக் கொண்டோம் என ஸ்மார்ட்
எனப்படும் மலேசிய பேரிடர் உதவி மற்றும் மீட்பு சிறப்புக் குழுவின்
மாஸ்-01 கட்டளை அதிகாரி முகமது அபிஸூல் அப்துல் ஹலிம்
கூறினார்.
அதிர்ஷ்டவசமாக நாங்கள் பாதுகாப்பாகச் சென்று பாதுகாப்பாகத்
திரும்பினோம். எங்களின் பணி நிரல் மண்டலாய், நேய்பிடாவ், சகாய்ங்
ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. மியான்மர் குறிப்பாக
உள்ளுர் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் சிறப்பான முறையில்
ஒத்துழைப்பை நல்கினர் என்று அவர் சொன்னார்.
நேற்று பூலாவ் மெராந்தி தலைமையகத்தில் நடைபெற்ற மாஸ்-01
குழுவின் வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத்
தெரிவித்தார்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கிய பள்ளி முதவர் எனக் கூறப்படும் 47 வயது
ஆடவரை சம்பவம் நிகழ்ந்து ஆறு நாட்களுக்குப் பிறகு மீட்டது பெரும்
சாதனையாக தாங்கள் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களை தேடி மீட்பது மற்றும் அவர்களுக்கு
மனிதாபிமான உதவிகளை வழங்குவது ஆகிய நோக்கங்களின்
அடிப்படையில் நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை
முகமையின் 50 உறுப்பினர்கள் கடந்த மார்ச் 30ஆம் தேதி மியான்மர்
புறப்பட்டனர்.
பத்து நாட்களுக்கு முன்னர் மியான்மரில் ரிக்டர் அளவில் 7.7 எனப்
பதிவான நில நடுக்கம் உலுக்கியதில் குறைந்தது 3,514 பேர்
உயிரிழந்ததோடு மேலும் 210 பேரை காணவில்லை என அறிவிக்கப்பட்டது.


