கோலாலம்பூர், ஏப். 8 - இம்மாதம் 1ஆம் தேதி நிகழ்ந்த எரிவாயு குழாய்
தீ விபத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட செயலாக்க வரையறை
காரணமாக தனது எரிவாயு விநியோகக் குறைப்பு நடவடிக்கையை கேஸ்
மலேசியா பெர்ஹாட் நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது.
கூடுதலாகப் பாதிக்கப்படும் இடங்களில் மெர்பாவ், துரோனோ, பிறை,
ஜூங்சோங் மற்றும் ஊத்தாங் மெலிந்தாங் ஆகியவையும் அடங்கும் என்று
அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விநியோகக் குறைப்பு காலக்கட்டத்தில்
மாற்றம் இராது என்பதோடு இம்மாதம் 20ஆம் தேதி வரை அது நீடிக்கும்
என்று அந்நிறுவனம் குறிப்பிட்டது.
அந்த பேரிடர் காரணமாக ஏற்பட்ட செயலாக்க வரையறை விளைவாக
புதிய இடங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் எரிவாயு குறைப்பு
பிரச்சினையை எதிர்கொள்வர் என்று அது தெரிவித்தது.
இந்த சமீபத்திய நிலவரங்களைக் கருத்தில் கொண்டு கேஸ் மலேசிய
நிறுவனம் தனது ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை
வலுப்படுத்தியுள்ளதோடு நிலையை சமாளிப்பதில் எரிவாயு
விநியோகிப்பாளர்களுடன் அணுக்கமாகச் செயல்பட்டு வருகிறது.
எரிவாயு விநியோக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு
உரிய ஆதரவையும் சமீபத்திய நிலவரங்களை உரிய நேரத்தில் வழங்கும்
கடப்பாட்டையும் தாங்கள் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் மேலும்
குறிப்பிட்டது.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காலை 8.10 மணிக்கு ஏற்பட்ட இந்த தீவிபத்தில்
30 மீட்டர் உயரத்திற்கு தீ கொளுந்து விட்டு எரிந்ததோடு அதன் வெப்ப
நிலை 1,000 டிகிரி செல்சியஸ் வரை எட்டியது. எட்டு மணி நேரப்
பேராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் 219 வீடுகள் சேதமடைந்த வேளையில் இதர 220 வீடுகள்
பாதிப்பிலிருந்து தப்பின.


