பெட்டாலிங் ஜெயா, ஏப். 8 - இவ்வாரம் நடைபெறவிருக்கும் பார்ட்டி
கெஅடிலான் ராக்யாட் (பி.கே.ஆர்.) கட்சித் தேர்தலில் பெட்டாலிங் ஜெயா
தொகுதி தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாகக் கட்சியின் தகவல்
தொடர்பு பிரிவு இயக்குநர் லீ சியேன் சுங் அறிவித்துள்ளார்.
மேலும், அத்தொகுதியின் இளைஞர் பிரிவு தலைவர் பதவிக்கு
கெஅடிலான் இளைஞர் பிரிவின் தகவல் பிரிவுத் தலைவர் நபில்
ஹலிமியும் மகளிர் பிரிவுக்கு மைசாரா இஸ்மாயிலும்
போட்டியிடவிருக்கின்றனர்.
இத்தொகுதிக்கு மதிப்புக் கூட்டும் முயற்சியாகவும் ஆரோக்கியமான
போட்டியை ஏற்படுத்தும் நோக்கிலும் பெட்டாலிங் ஜெயா தொகுதி
தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடவிருப்பதாக அத்தொகுதிக்கான
நாடாளுமன்ற உறுப்பினருமான லீ தெரிவித்தார்.
யாரையும் மதிப்புக் குறைப்பு செய்வதோ அல்லது தனிப்பட்டத்
தாக்குதல்களை நடத்துவதோ இந்த போட்டியின் நோக்கமல்ல. கட்சி
ஆதரவாளர்களுக்கும் பெட்டாலிங் ஜெயா மக்களுக்கும் சிறந்தவற்றை
வழங்கும் அதேவேளையில் மடாணி அரசாங்கம் சிறந்த இலக்கை நோக்கி
பயணிப்பதற்கு உதவுவதும் தாம் களம் காண்பதற்கான நோக்கமாகும் என
அவர் குறிப்பிட்டார்.
இந்த தொகுதியிலுள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளான தாமான்
மேடான், ஸ்ரீ செத்தியா மற்றும் புக்கிட் காசிங் ஆகியவற்றில் அடிமட்ட
ஆதரவு வலுப்படுத்துவது மற்றும் பெட்டாலிங் ஜெயாவில் குறைந்தது 50
கிளைகளை அமைப்பது தமது இலக்காகும் என அவர் சொன்னார்.
சொந்த அலுவலகத்தைக் கொண்டுள்ள முதலாவது தொகுதியாகப்
பெட்டாலிங் ஜெயாவை உருவாக்க விரும்புகிறேன். மேலும், தொகுதி
மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் அடிமட்ட உறுப்பினர்களின் கருத்துகளைப் பெறுவதற்காகப் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள கிளைகள் நிலையிலான கூட்டத்தை நடத்தவிருக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.


