கோலாலம்பூர், ஏப். 7 - சிரியாவில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதற்காக அதிபர் அகமது அல்-ஷாராவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த மலேசியா உறுதிபூண்டுள்ளதோடு பொருளாதாரத் துறையில் முதலீடு செய்யவும் சிரியாவின் மறுசீரமைப்பு முயற்சிகளில்
பங்களிக்க மலேசிய நிறுவனங்களை ஊக்குவிக்கவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக சிரியாவிற்கு வருகை தருமாறு அதிபர் அல்-ஷாரா என்னை அழைத்துள்ளார் என்று அன்வார் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
சிரியா மார்ச் 29ஆம் தேதி தனது புதிய அமைச்சரவை பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் தேசிய நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அல்-ஷாரா உறுதிப்படுத்தியதாக அனாடோலு செய்தி நிறுவனம் கூறியது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் அல்-ஷாரா தலைமையிலான எதிர்ப்புப் படைகளால் பஷார் அல்-அசாத் ஆட்சி வீழ்த்தப்பட்ட பின்னர் பிரதமர் முகமது அல்-பஷீர் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு நியமிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஜனவரி மாத இறுதியில் அல்-ஷாரா அந்நாட்டின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
சிரியாவை கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆட்சி செய்த அசாத், கடந்தாண்டு டிசம்பர் 8 ஆம் தேதி தலைநகர் டமாஸ்கஸை எதிர்ப்புக் குழுக்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து ரஷ்யாவிற்கு தப்பிச் சென்றார்.


